Kadhai Alla Nijam

Wednesday, November 12, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்படவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம்

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்படவேண்டும் என தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் தமிழக முதல்வர் கருணாநிதி தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-இலங்கையில் கடந்த 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழர்களின் பிரச்சனை முடிவுக்கு வராமல் லட்சக்கணக்கானோர் அகதிகளாகி எஞ்சியிருப்போர் எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் நித்தம் நித்தம் சிந்தும் ரத்தமும், வடிக்கும் கண்ணீரும் நெஞ்சை பிளக்கும் நிகழ்ச்சிகளாகி விட்டன. இந்த நிலையில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கை தமிழர்களுக்கான உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை தமிழகத்திலிருந்து செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் வாயிலாக அனுப்பி வைக்கிறோம். எனினும் இந்த உதவிகள் மட்டும் போதுமானதல்ல. இலங்கை தமிழர்களின் இந்த அவல நிலை உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாடு ரீதியாகவும் ஒன்றாக உள்ள 7 கோடி இந்திய தமிழர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தில் அனைத்து அரசியல் இயக்கங்கள், அரசியல் சார்பற்ற அமைப்புகள் என எல்லா தரப்பினரும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதை தொடர்ந்து சென்னையில் வரலாறு படைத்த மனித சங்கிலி நடைபெற்றது. இலங்கை தமிழர்களின் இன்னல்களை நீக்க வேண்டுமானால் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது உலக தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும். போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு தாங்கள் தயார் என்று மற்றொரு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக படைகளை பழைய நிலைக்கு விலக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்துகிறது. இந்திய பேரரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சகவாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததையடுத்து, அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.

No comments: