Kadhai Alla Nijam

Tuesday, February 3, 2009

நூல் மதிப்புரை அடியாள்




ஆசிரியர் : ஜோதி நரசிம்மன்


மதிப்புரை : கவிஞர்.த.பழமலய்


‘ஓர் அரசியல் அடியாளின் வாக்கு மூலம்’ என்னும் துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ள நூல் ‘அடியாள்’. “செஞ்சிக்கு அருகே இருக்கும் ஆலம்பூண்டியில் பிறந்தவர் நூலாசிரியர் ஜோதி நரசிம்மன். வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்தில். ஐ.டி.ஐ. படித்திருக் கிறார். இது இவருடைய முதல் நூல். ஜோதி நரசிம்மன் பள்ளி ஆசிரியர்களைப் பெற்றோர்களாகக் கொண்டவர். அண்ணன்களாக இருப்பவர்கள் இருவர். இவருக்கு மூத்த அண்ணன் இறந்துவிட்டார். பெண் பிள்ளைப் பேறு இல்லாத இவர் தாயார் இவர்களுக்குப் பத்து, லட்சுமி, ஜோதி எனப் பெண் பெயர்களை வைத்து அழகு பார்த்திருக்கிறார். படித்தவருக்கு உரிய காலத்தில் ஒரு வேலை கிடைத்திருந்தால், இப்படி ஓர் அடியாளாக வளர்ந்திருக்க மாட்டார். ‘வன்முறையின் மீதான காதல்’ என்பது, ஓர் இளைஞனின் ஆற்றல் உரிய காலத்தில் சரியாகப் பயன்படுத்தாமல் போவதால் நேர்கிறது. அப்படி நேர்ந்த வாழ்வு இவருடையது. தாய்த்தமிழ்ப் பள்ளி ஒன்றின் புரவலர் ஒருவரை இவர் சந்திக்க நேர்ந்தது அவரை இவருக்கு அரசியல் வழிகாட்டியாக ஆக்கியிருக்கிறது. அதன் வளர்ச்சிப் போக்கில், அய்யா பழ. நெடுமாறன் அவர்களைத் தலைவ ராக ஏற்றுக் கொண்டு விட்டார். வாழ்க்கை புதிய பாதையில் திரும்புகிறது. இயல்பிலேயே வாசிப்புப் பழக்க முள்ள புத்தகப் பிரியராக நரசிம்மனுக்கு நல்ல புத்தகங்களின் அறிமுகம் நல்ல ஆளுமை வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது. இவர் சமூகவியல் முதலாண்டு படித்து இடையில் நின்றவர்.“தங்களுக்கான உரிமைகள் பற்றி அறியாதவர்களும், வழக்கு நடத்த வசதியில்லாதவர்களும் தான் பெருமளவும் சிறையில் இருக்கிறார்கள்” என்கிற பொதுவான புரிதல், ஜோதி நரசிம்மனை, அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவக் கூடிய பத்திரிகை நிருபர் ஆவதற்கு உந்துதல் தந்திருக் கிறது. கூடவே ‘ஆயுத எழுத்து’ என்று மாத இதழையும் நடத்துகிறார். இதுபற்றி அவர் நூலில் குறிப்பிடுவது. “அதுவரை என்னை நோக்கி நீண்டிருக்க போலிசின் கைகள் மடக்கப் பட்டு, போலிசை நோக்கி என் கைகள் நீளத் தொடங்கியது...”இதுதான் மாற்றம். இப்படி மாற வேண்டியவர்கள் மனிதர்கள். மாறுவ தால்தான் மனிதர்கள். காலம் கற்பிக்கிறது என்பது மெய்தான். கற்றுக் கொண்டால் தானே உண்டு. விழித்துக் கொண்டவர் நரசிம் மன். இளைஞர்களுக்கு விழிப்பைத் தருகிறார் அதற்குப்பிறகு சிறைப்படும் போது மனது பெருமிதம் கொள்கிறது.“நான் முதலில் கைதானது ஓர் அடியாளாக. இப்போது கைதாகி இருப்பது ஒரு போராளியாக” என்கிறார். தன் அனுபவங் களின் கசடுகளைத் தக்க வைத்துக் கொள்ளா மல், பன்னாடையாக இல்லாமல், நல்லன வற்றைச் சலித்துக் கொள்ளும் சல்லடையாக இருந்திருக்கிறார்.முதலில், கடலூர் சிறையில் அம்மா, அப்பாவை நினைத்து மருகுகிற நரசிம்மன், பிறகு, புழல் சிறையில் தன் மனைவி, மகளை நினைத்து நெகிழ் கிறார். மனமும் மனச்சாட்சியும் உள்ள வர்களால்தான் இவ்வாறு உருக முடியும். நூலின் 160 பக்கங்களில் ஜோதி நரசிம்மன் என்கிற இளைஞன் - என்ன சொல்கிறார்? என்ன சாதித்திருக்கிறார்? காந்தி தன் சத்திய சோதனையில், சொன்னதை, சாதித்ததை - என்று மதிப்பிடுவது மிகையாகத் தோன்ற லாம். ஆனால், ஒரு சிறைய அளவில் நடந்திருப்பதும் நூலின் சிறப்பும் அதுதான்.இதற்கு அப்பால் புத்தகத்தில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள கைது செய்யப் படுகையில், சிறைக் கைதிகளின் உரிமைகள், கைதிகள் நேர் காணும் மனு, முதல் தகவல் அறிக்கை போன்றன யாருக்கும் உதவக் கூடியன. ‘விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்க்கையை உன்னிப்பாகப் படித்து வருபவரும் மனித உரிமை ஆர்வல ருமான’ஜோதி நரசிம்மனின் பரிணாம வளர்ச்சி அவர் ஓர் அடியாளாக இருந்து ‘அடியாராக’ மாறி இருப்பது தான். இது வரவேற்றுப் பாராட்டத்தக்கது. இவரது தன் வரலாறு, படிக்கத் தக்கது. இடம் பெற்றுள்ள கிளைக் கதைகள் காவியத் தளத்திற்கானவை. அசல் வாழ்க்கை, படைப்பு ஆகையில் அதன் கூறுகள் பல தளத்திற்கு உயர்ந்து விடுகின்றன. அப்படி உயர்ந்து நிற் கின்றன. ஜோதி நரசிம்மனின் அனுபவங்கள்.


முகவரி :

அடியாள்ஜோதி நரசிம்மன்

பக்கங்கள் 160,

விலை ரூ.70/-

வெளியீடு :கிழக்கு பதிப்பகம்,

33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்பேட்டை,

சென்னை-18.

No comments: