Kadhai Alla Nijam

Friday, April 17, 2009

ஈழம் மலரும்போது

தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.
பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -
இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -
கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.
காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.
வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.
தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.
போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.
சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.
வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.
இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.
"இலங்கை விடயத்தில் இருந்து நீங்கள் வெளியில் போய் விடுங்கள்" என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் நேரடியாகவே சொன்னதாக, எரிக் சொல்ஹெய்ம் எனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.
மேலும், அண்மையில் - தம்மால் "அதிசயம் எதனையும் நிகழ்த்த முடியாது" என்று சொன்ன எரிக் சொல்ஹெய்ம், "அமெரிக்காவோடு பேசுவேன், ஜப்பானோடு பேசுவேன், ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேசுவேன்" என்றுவிட்டு இந்தியா பற்றி வாய் திறப்பதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டார்.
ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்த நோர்வேயை, இப்போது - சிறிலங்காவை வைத்து அதிகாரபூர்வமாகவே அங்கிருந்து வெளியேற்றிவிட்டது இந்தியா.
இன்னொரு வகைளில் சொல்லப் போனால் - 'இலங்கைப் போரை நாம் தான் நடத்துகின்றோம்; வேறு யாரும் அங்கு தலையிடத் தேவையில்லை' என்று மேற்குலகிற்கு இந்தியா அரசு சொன்ன செய்தி அது.
'போரை நிறுத்து' என்று சும்மா சொன்னால் போர் நிற்காது என்பது தெரிந்திருந்தும், 'போரை நிறுத்து' என்று புலம்புகின்றது இந்த உலகு.
ஈழத் தமிழனைக் காப்பதே தன் 'கடைசிச் சாதனை' என்று வாய்ச் சவடால் விட்ட கருணாநிதியோ, தமிழனை 'அம்போ' என்று கைவிட்டுவிட்டு, தனது ஏதோ ஒரு கடைசி ஆசைக்காக காங்கிரஸ் காரர்களின் கால்களில் விழுந்து நக்கத் தொடங்கிவிட்டார்.
எல்லோருமாகச் சேர்ந்து - தமிழனின் காதிலே பூ சுற்றி, அவனின் தலையிலே இப்போது மிளகாயும் அரைக்கின்றார்கள்.
சிங்களப் படையெடுப்பை நிறுத்தி, நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்கத் திராணியற்ற உலகமோ, இப்போது - உலகத் தமிழ் செயற்பாட்டாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு - 'போருக்குப் பின்னான காலம்' என்றும் 'புலிகளுக்குப் பின்னான காலம்' என்றும் பசப்பு வார்த்தைகள் பேசத் தொடங்குகின்றது.
போரும் முடிந்து, புலிகளும் முடிந்த பின்னர் - ஏதோ அவர்களே இறங்கி நல்ல தீர்வு வாங்கித் தருவார்கள் என்று எம்மை நம்பவைக்கும் விதமாகப் பேசி மயக்கத் தொடங்குகின்றது உலகு.
போரும் முடிந்து, புலிகளும் முடிந்து போன பின்னர் யாரும் தமிழனை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது, சொல்லுகின்ற அவர்களுக்கும் கேட்கின்ற எமக்கும் தெளிவாகவே தெரியும்.
யாருடைய மயக்குதலுக்கும் நாங்கள் இனி ஆளாகத் தேவையில்லை; எல்லாம் முடிந்து போன பின்னர், கருணாநிதியின் கருணையும் எமக்குத் தேவையில்லை.
இந்த உலகத்தையே இப்போது நாங்கள் உலுக்க தொடங்கிவிட்டோம்.
சிவப்பும், மஞ்சளும், புலி பாயும் எங்கள் செங்கொடியுமாக - உலகத் தலைநகரங்களை நாங்கள் நிறைத்த பின்னர்தான், எமது செய்தி என்ன என்பதை நிதானமாகக் கேட்கின்றது உலகு.
'பயங்கரவாத'ப் பட்டம் சூட்டி - நிராகரித்து - எம்மைப் பயமுறுத்தி வைத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போயே போய் விட்டது.
உலக ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகளுக்கு நேர் முன்னால் நின்று - "விடுதலைப் புலிகள் எங்கள் சுதந்திரப் பேராளிகள்!" என்று நேரடியாகச் சொல்ல நாம் துணிந்து விட்டோம்.
"புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழர்களுக்கு எதிரான போரேதான்" என்று நாம் உரக்கச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.
புலிகளைத் தடைசெய்து விட்டு - 'பயங்கரவாதிகள்' என்று தமிழனைக் கொச்சைப்படுத்தி ஒதுக்கிய நாடுகளின் காவல்துறையும், சட்டமும் - இன்று, புலிக்கொடிகள் தாங்கி நாங்கள் லட்சக்கணக்கில் அவர்களது தெருக்களிளேயே அணிவகுக்கின்றபோது - ஒரு ஓரமாகப் பார்த்து நிற்கின்றன என்பது தான் யதார்த்தம்.
இப்படி ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பனை கூடச் செய்து பார்த்தது கிடையாது.
புலிக்கொடி பிடித்தாலோ அல்லது புலிகள் பற்றிக் கதைத்தாலோ இந்த உலகம் எம் கதையைக் கேட்காது என்று மிக அண்மைக்காலம் வரை நாமே எமக்குச் சொல்லிக்கொண்டு சும்மா கிடந்தோம்.
ஆனால், இவ்வளவு காலமும் எமது போராட்டங்களுக்குச் செவிமடுக்காத உலகு, இன்று - புலிக்கொடிகளோடு நாங்கள் வீதிகளில் இறங்கிய பின்னர் தான் எங்கள் கதையைக் கேட்கின்றது.
விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்த தொடங்கிவிட்டோம்.
இருந்தாலும் - எமக்குச் சாதகமாக உலகில் எதுவும் நடக்காதது போல எமது பார்வைக்கு இப்போது தோன்றலாம்; அதில் இப்போதைக்கு ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம்.
புலிக்கொடிகளோடு நாம் அலைந்து திரிவது தான் அதற்குக் காரணம் என்று சிலர் சொல்லப்பார்க்கின்றார்கள்; ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல.
எமக்குச் சாதகமான சூழல் வெளிப்படையக அமைவது தாமதம் ஆகுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் உள்ளன:
ஒன்று -
தங்களது தலைநகரங்களை நிறைத்துப் போராடுகின்ற தமிழரது உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள தமது 'மனிதாபிமான விழுமியங்களுக்கும்' (Humanitarian Values) -
சிறிலங்காவைத் தனது கைப்பொம்மையாக வைத்து ஆட்டுகின்ற இன்றைய இந்திய அரசுடனான தமது 'வெளியுறவுக் கொள்கை'க்கும் -
தென்னாசிய, இந்த சமுத்திர பிராந்தியத்தில் தமக்கு இருக்கின்ற 'கேந்திர நலனுக்கும்' இடையில் பின்னப்பட்டிருக்கின்ற 'இராஜதந்திர' வலையில் இந்த உலகு சிக்குண்டிருக்கின்றது.
இரண்டாவது -
அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டின் அரசாங்கம் (Government of a Sovereign State) என்ற வகையில் - தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள நிலம் மீதும், மக்கள் மீதும் தனது சக்தியையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமை சிறிலங்கா அரசிற்கு உள்ளதால், தனது அதிகார பலத்தை தனது எல்லைக்குள் மட்டும் பிரயோகிக்கும் ஒர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத 'சட்ட வலைக்குள்ளும்' இந்த உலகு சிக்குண்டுள்ளது.
எமக்குச் சாதகமான சூழல் உலகில் ஏற்படாதது போல தோன்றுவதற்கு இவை இரண்டுமே முதன்மைக் காரணிகள்; ஒரு அளவுக்கு மேல் எம்மால் எதனையும் இந்த உலகிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது.
உலகை ஆளும் இயங்கு மையம் 'மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி' நகர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் இப்போது நிலைகொள்வதாகச் செல்லப்படுகின்றது.
'ஒற்றை வல்லரசு' தகுதியை அமெரிக்கா இழந்துவர - 'பூகோள வல்லரசு' என்ற நிலைக்காக இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுவதாகவும் நோக்கப்படுகின்றது.
இவற்றுக்குப் பின்புலமாக - பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கேந்திர நலன்கள் கொண்ட - நுணுக்கமான பல காரணங்கள் இருக்கின்றன.
நடந்துவரும் இந்த உலக மாற்றத்தைப் பின்னணியாக வைத்தே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.
இந்தியாவை மீறி இப்போதைக்கு இந்த உலகம் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் இந்தப் பின்னணியை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.
2001 செப்ரெம்பருக்குப் பின்னான உலகச் சூழலைச் சரிவரக் கணிக்காமல் விடுதலைப் புலிகள் இயக்கம் விட்ட சில அரசியல் - இராஜதந்திர - இராணுவத் தவறுகளும் இன்றைய பின்னடைவு நிலைக்குக் காரணம் என்பதும் உண்மைதான்.
ஆனால், இன்று நிலைமை எப்படி இருந்தாலும், எமக்கான காலம் உலகில் கனிந்து வருகின்றது என்பது தான் உண்மை; ஆனால், அது சற்று காலதாமதம் ஆகின்றது.
அடுத்து வருகின்ற ஓரிரு மாத காலம் தான் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற காலம்.
இதுதான் உச்ச நேரம்; இந்த ஒரிரு மாத காலத்தின் ஒவ்வொரு நாளும் பெறுமதியானவை.
உலக ஓட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விடயம் எமக்குத் தெளிவாகப் புரியும்; இனத் துடைத்தழிப்புப் படுகொலைகள் உலகில் நிகழ்ந்த போது, எங்குமே அவை தடுக்கப்பட்டதில்லை.
இன அழிப்புக்கள் நிகழும் போது யாரும் அதில் தலையிடுவதுமில்லை: அவ்வாறு தலையிடாமல் இருப்பதற்கு அவரவருக்கு அவரவரது சொந்தக் காரணங்கள் உண்டு; யாரையும் இதில் குற்றம் சாட்டவும் முடியாது.
எல்லாம் முடிந்த பின்னர் தலையிட்டு - விசாரணை, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அது, இது என்று அடுக்கெடுப்பது தான் உலக வழமை.
அதுதான் - "Post Conflict Scenario"
இப்போது - எமது விடயத்திலும் - போரும் முடிந்து, இன அழிவும் முடிந்த பின்னர் - பெட்டி படுக்கைகளோடு வந்து இறங்குவதைத் தான் "போருக்குப் பின்னான காலம்" என்று பேசுகின்றார்கள்.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் -
முன்னைய காலங்களில் இனத்-துடைத்தழிப்புக்கு உள்ளாகிய இனங்களுக்கு இருந்திருக்காத சாதகமான புற மற்றும் அகச் சூழ்நிலைகள் எமக்கு இப்போது உள்ளன என்பது தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம்.
நான்கு விடயங்கள் முக்கியமானவை:
ஒன்று - எப்போதோ முடிந்துவிடும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மிகப் பலமாக இன்னமும் தொடரும் விடுதலைப் புலிகளின் மரபுவழி ஆயுதப் போராட்டம்.
இரண்டாவது - அனைத்துலக அரங்கில் தமிழர்கள் நடத்தும் - மிக வலிமையான - உதாசீனம் செய்து ஒதுக்கிவிட முடியாத பேரெழுச்சிப் போராட்டங்கள்.
மூன்றாவது - தமிழ்நாட்டு மக்களின் - கேள்விக்கிடமற்ற - ஏகோபித்த துணையும், உலகத் தமிழினம் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருக்கும் பலமும்.
நான்காவது - உலக வல்லரசு நிலைமாற்றங்கள், தென்னாசியாவின் வளர்ந்து வரும் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றுடன், இந்தியத் தேர்தல்.
இந்த நான்கில் முதல் இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.
இன அழிப்புப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று போராடினால் தான் உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, ஆயுதப் போராட்டம் உச்சமாக நிகழ்கின்ற போது முன்வைத்தால்தான் எமது அரசியல் கோரிக்கைகளும் எடுபடும் என்பதும் அதே அளவுக்கு உண்மை.
இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் போராடினால், சில சமயம் இன அழிப்பைத் தடுக்க முடியாமலே கூட போய்விடலாம்; ஆனால், தெளிவான அரசியல் கோரிக்கையையும் முன்வைத்துப் போராடினால் - இன அழிவையும் தடுத்து, அரசியல் உரிமைகளையும் பெற்றுவிடும் சாதகச் சூழல் எமக்கு கனிந்து வருகின்றது.
எனவே - இன அழிப்பைத் தடுக்கும் படி போராடி உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈர்க்கப்பட்ட அந்தக் கவனத்தின் முன்னால் எமது தெளிவான அரசியல் போரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டும்.
அதற்கு இது தான் மிகச் சரியான நேரம்.
அடிப்படையான எமது அரசியற் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.
அந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது; ஏனெனில், அவை இரண்டுமே, மேற்குலகு போற்றும் 'ஜனநாயக' வழிமுறைகளினூடாகத் தமிழர்களால் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட விடயங்கள்.
ஒன்று - 'தமிழீழத் தனியரசே எமக்கான தீர்வு': 1977 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தத் தீர்வுக்கு வக்களித்து, நாம் அதனைத் தெளிவாகச் சொல்லியாகிவிட்டது. அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை; தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க இனி ஒரு பொதுவாக்கெடுப்பும் (Referendum) தேவையில்லை.
இரண்டாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே எமது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் (Authentic representatives): 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அங்கீகாரத்திற்கு வாக்களித்து, விடுதலைப் புலிகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த மாற்றத்திற்கும் இனி இடமில்லை.
இந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைளையும் இந்த உலகம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விதமான புறச்சூழல் நிச்சயமாக ஏற்படும்.
- 'புலிகள் எங்கள் சுதந்திரப் போராளிகள்' என்பதை இந்த உலகத்தின் செவிப்பறை கிழிய நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க -
- சிங்களப் படைகளின் முன்னேற்றங்களுக்கு எதிராகப் புலிகள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க -
- காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ள -
இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்றபோது - எமக்கான ஒருநாள் நல்லவிதமாக விடிந்தே ஆகும்.
இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்ற போது - இந்த உலகம் எமது குரலைக் கேட்டுத்தான் ஆகும்; எமக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துத்தான் ஆகும்.
வன்னிப் போரைப் புலிகளும், இந்தியத் தேர்தலை எம் தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக்கொள்ள - எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
சிலையாய் நிற்கின்ற நேரு மாமாவின் தலையை உடைத்து, சும்மா கிடக்கின்ற சிறிலங்கா தூதரகத்தை நொருக்கி - எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.
ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.
எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....
படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;
எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதி பிரிகேடியர் தீபனின் புதைகுழியின் மேலே கைகளை வைத்து

No comments: