Kadhai Alla Nijam

Thursday, April 23, 2009

பா.நடேசன்

தளபதிகளை இழந்திருப்பினும் போராட்டத்திற்கு தடையில்லை - பா.நடேசன்
இவ் விடயம் 24. 04. 2009, (வெள்ளி), தமிழீழ நேரம் 2:48க்கு பதிவு செய்யப்பட்டது
கட்டுரைகள்
தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உச்சகட்டத்தைத் தொட்டு நிற்கிறது. மூன்று லட்சம் மக்கள் ராணுவப் படுகொலையை எதிர்பார்த்துத் தவித்து நிற்கிறார்கள். 1995 ஜூலையில் நடந்த உலகையே உலுக்கிய `செர்பேனியா இனப் படுகொலை’யைப் போன்று இலங்கையில் நடந்துவிடுமோ?
அதை உலக நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமோ என அச்சத்தோடு எழுதுகிறது அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளேடான `நியூயார்க் டைம்ஸ், களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகள் தரப்பிலோ தீபன், துர்கா, விதுஷா உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த தளபதிகள் ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு பலியாகிப் போனார்கள். `புலிகளின் பலம் அவ்வளவுதான்! ஒன்று சரணடைய வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும்’ என்கிறார் ராஜபக்ஷே. இந்தியா உள்பட சர்வதேச நாடுகளும் போர் நிறுத்தக் குரலை எழுப்பிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசனிடம் சென்ற வாரத்தில் சில கேள்விகளை முன்வைத்தோம்…
`விடுதலைப்புலிகளின் கடைசி தளமான புதுக்குடியிருப்பும் வீழ்ந்தது. அந்தச் சண்டையில் தீபன், துர்க்கா, கடாபி, மணிமாறன் உள்ளிட்ட பல முக்கியத் தளபதிகள் மட்டுமன்றி, 420-க்கும் மேற்பட்ட புலிகள் அழிக்கப்பட்டார்கள். எஞ்சியிருக்கும் முக்கியத் தலைவர்களும் சரணடைந்து விடுமாறு இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம். இல்லையென்றால் முற்றாக அழிக்கப்படுவார்கள்’ என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறது. உண்மை நிலை என்ன?
பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா உள்பட புகழ்பூத்த தளபதிகள் சிலரை இந்தச் சண்டையில் நாம் இழந்துவிட்டோம். இது ஒரு முற்றுகைச் சண்டை. எமது 30 வருட கால போராட்ட வரலாற்றில் இதுபோன்று சில தடவை எமது முக்கியத் தளபதிகளை ஒரு சண்டையில் அல்லது ஒரு சம்பவத்தில் இழந்திருக்கிறோம். அப்போதும் இவ்வாறுதான் சிங்கள ராணுவம் வெற்றிவிழா கொண்டாடியது. `புலிகள் ஒழிந்தார்கள்; போராட்டம் நசுக்கப்பட்டது!’ என்றெல்லாம் கூறியது. அது போன்று இப்போதும் மகிழ்ச்சியடைந்து வெற்றிப்பெருமித அறிக்கைகள் விடுகின்றது. இப்போது புதிய களமுனை திறக்கப்பட்டுள்ளது. புதிய போர்வியூகங்களை அமைத்துச் சண்டையிடுகின்றோம்.”
விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மையானால், இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் என்னவாகும்? யார் முன்னெடுத்துச் செல்வது? அனுபவமிக்க தலைமை இல்லாத நிலையில் இனிவரும் நாட்களில், சிங்கள ராணுவத்தை உங்களால் எப்படி எதிர்கொள்ள முடியும்?
சங்கிலித்தொடர் போன்று பல கட்டளைத்தளபதிகளைத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்டுள்ளார். தலைவரின் தலைமையின் கீழ் வீரத்தளபதிகள் பலர் உள்ளனர். ஒருவரின் இடத்தை இன்னொருவர் இட்டு நிரப்பி, போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தும் ஆற்றல் எமது இயக்கத்திற்கு உண்டு. இதை எமது வரலாறு நிரூபித்து வருகின்றது
முக்கியத் தளபதிகள் உள்பட ஏராளமான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்களைப் பார்க்கும்போது போராளிகளின் உடல் முழுதும் கருகிய நிலையில் காணப்படுகிறது. இணையதளச் செய்திகள், அது ரசாயனக் குண்டு வீச்சால் ஏற்பட்ட கொடுரம் என்று கூறுகிறது. உண்மைதானா?
போர் விதிகளுக்கு முரணாக சிங்கள அரசு போரை நடாத்துகின்றது என்பது உண்மையே. தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை - கொத்துக்குண்டுகளை சிங்களப்படையினர் போரில் பயன்படுத்துகின்றார்கள். இதுபோன்று சிவிலியன்கள் மீது வான்தாக்குதல்களை - குண்டுத்தாக்குதல்களை அவர்கள் நடத்துகிறார்கள். தமிழருக்கு வரவேண்டிய உணவை - மருந்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் நிலைகளில் நஞ்சைத்தூவி வருகிறார்கள். இவ்வாறாக, வெற்றிக்காக எந்தவிதமான அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் செய்யத் தயாரான ஒரு பயங்கரவாத அரசாகவே சிங்கள அரசு உள்ளது.”
சிங்கள ராணுவத்திற்குப் பெரிய இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, ராணுவத்தின் பலம் வாய்ந்த 58 மற்றும் 59-வது படையணி முற்றாக சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நடந்துள்ள புதுக்குடியிருப்பு `புலிகளின் இழப்பு’ எப்படி சாத்தியப்பட்டது?
“புதுக்குடியிருப்பில் சிங்களத்தின் நான்கு டிவிஷன்களைக் கொண்ட படையினர் சண்டையில் ஈடுபட்டனர். ஆட்பலத்தில் அதிகூடிய அந்தப் படைக்கு ஆதரவாக இஸ்ரேலில் செய்யப்பட்ட அதிநவீன குண்டுவீச்சு விமானமான கிபீர் விமானங்கள் எம்மீது குண்டுகளைப் போட்டன. முற்றுகைப்போர் முறையில் சிங்களப்படைகள் சண்டை செய்தன. அந்த முற்றுகையை உடைத்து சிங்களப்படைக்கு பாரிய உயிரழிவை ஏற்படுத்த எமது போராளிகள் வீரமாகப் போரிட்டனர். புதுக்குடியிருப்பு சமரில் மட்டும் சுமார் ஐயாயிரம் படையினரை சிங்களப்படை இழந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் புதுக்குடியிருப்பு முற்றுகைச் சமரில் சிங்களப் படைக்கு பாரிய உயிரழிவை ஏற்படுத்தி சமரில் ஆதிக்கம் செலுத்தினோம்.”
சிங்கள ராணுவத்தின் சிறப்புப் படையணியான 58-வது படைப் பிரிவில் இப்போது இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையணி சேர்ந்திருப்பதாகவும், 59-வது படையணியில் பாதிக்குமேல் இந்திய சிப்பாய்கள் இருக்கிறார்கள் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வவுனியா மருத்துவமனையில் வைத்தியத்திற்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள சிப்பாய் மூலமே இந்தத் தகவல்கள் கசிந்திருக்கிறது என்கிறார்கள். உண்மைதானா?
சிங்கள ராணுவத்திற்கான இந்திய உதவி என்பது அரசியல் ரீதியானதாகவும் - ராஜதந்திர ரீதியானதாகவும் - ராணுவ ரீதியானதாகவும் உள்ளது. இந்தியப்படையின் ராணுவ ஆலோசகர்களும் பயிற்சியாளர்களும் தாராளமாக சிங்களப்படைக்கு உதவி வருகின்றனர். இந்திய - சிங்களத்தின் உயர்மட்டத் தளபதிகள் இடையே ஒத்துழைப்பும் கருத்துப் பரிமாற்றமும் உள்ளது.”
அருகில் உள்ள இந்திய வல்லரசுக்கு, `விடுதலைப்புலிகளும் சரி, ஈழத் தமிழர்களும் சரி எதிரிகள் அல்ல. சிங்களவர்களைவிட நாங்கள்தான் உண்மை நட்பாக இருப்போம்’ என்று தொடர்ந்து கூறிவருகிறீர்கள். இப்படி தொடர்ந்து கூறவேண்டியதன் அவசியம் என்ன?
“ஒரு வரலாற்று உறவை அடிக்கடி இந்திய ஆட்சியாளருக்கு சுட்டிக்காட்டியும் நினைவூட்டவும் விரும்பியே அவ்வாறான கருத்தை அடிக்கடி சொல்லி வருகின்றோம். ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்குமான உறவுபோல, இந்திய_சிங்கள உறவு என்றுமே நட்பு ரீதியானதாக, பரஸ்பர நன்மை கொண்டதாக இருக்கவில்லை. இப்போது மட்டும்தான் இந்திய அரசு சிங்கள அரசுடன் நட்புப் பாராட்டி ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்ய சிங்களத்திற்கு உதவுகின்றது. இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டிக்காட்டுகின்றோம். சிங்கள அரசின் இன அழிப்புப் போருக்கு இந்திய அரசு உதவுவதை எமது மக்கள் விரும்பவில்லை என்பதுடன் அதை ஒரு வேதனையான விடயமாகவும் நோக்குகின்றனர்.”
அங்கு தமிழர்கள் மீதான போர் நடப்பதற்குக் காரணமே மத்திய ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் என்றார்கள். அந்தக் கட்சியோடு தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணி வைத்துள்ளதை அங்குள்ள மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
ஈழத்தமிழ் மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் எமது தொப்புள்கொடி உறவுகளான எட்டுக்கோடி தமிழக மக்களும் எழுச்சிகொண்டு தமது உணர்வுகளையும் ஆதரவினையும் வெளிப்படுத்தியே வருகின்றனர். கட்சி வேறுபாடுகள் சகலத்தையும் மறந்து சகல மக்களும் ஒருமித்த ஒரே குரலாகக் குரல்கொடுத்து வருகின்றனர். தற்போது சிங்கள அரசு புரிந்து வரும் இனப்படுகொலை யுத்தத்திற்கு எட்டுக்கோடி தமிழக மக்களும் சகலத்தையும் மறந்து எமக்காக ஒருமித்த குரல் எழுப்புவது மட்டுமல்ல; தீக்குளித்து உயிரையே அர்ப்பணித்து வருகின்றனர். அந்த வகையில் இம்முறை தேர்தலில் எமது அரசியல் உரிமைகளுக்கான குரலாக, போராட்டத்தின் குரலாக தமிழக மக்கள் பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்கிறார்கள். யார் யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதையே எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.”
மதி.மு.க. வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் மீதான தங்களின் பார்வை எப்படி? அவர்கள் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
“வைகோ அண்ணனும் தோழர் பாண்டியன் அவர்களும் எமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். ஈழத்தமிழர்களின் மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் தீவிர ஆதரவாளர்களும் _ அபிமானிகளுமாவர். எமது மக்களின் பேரன்பிற்கும் இவர்கள் பாத்திரமானவர்களாக உள்ளனர். அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணியாகும். எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதற்காக பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.”
`பிரபாகரனைப் பிடிப்போம்’ என்கிறார் ராஜபக்ஷே. `அப்படிப் பிடித்தால் மாவீரன் அலெக்ஸாண்டர், இந்திய மன்னன் புருஷோத்தமனை நடத்தியதைப் போன்று கௌரவமாக நடத்த வேண்டும்’ என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
“தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பது சிங்களப் பேரினவாதிகளின் கனவாகும். இன்றைக்கு மட்டுமல்ல; என்றைக்கும் அது நிறைவேறப்போவதில்லை. தமிழர்கள் மனதில் ஒரு வீரவாழ்வை ஆழப்பதித்துவிட்ட, விடுதலை வீரர்கள் நாங்கள். வெற்றிக்காக உயிர் விலைகொடுக்கவும் தோல்விக்குப் பரிசாக மரணத்தை அரவணைக்கவும் தயாரானவர்கள் நாங்கள். தமிழக முதல்வர் ஏன் அத்தகைய கருத்தைக் கூறினார் என்பது எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் அக்கறை செலுத்தாத அந்தக் கருத்தைப் பற்றி விமர்சனங்களைக் கூற நாங்கள் விரும்பவில்லை.”
முதல்வர் கருணாநிதியின் முயற்சியால்தான், இலங்கை அதிபர் ராஜபக்ஷே 48 மணி நேர போர் நிறுத்தம் செய்தார்’ என்று தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் கூறியிருக்கிறாரே?
“ராஜபக்ஷேவின் நரித்தனத்தைச் சரிவர உணர்ந்துகொள்ளாமையின் விளைவு, சந்திரகாசனின் கூற்றாகும். இந்தியா உள்பட உலக நாடுகளை ஏமாற்ற ராஜபக்ஷே செய்த கண்துடைப்பே போர்நிறுத்த அறிவிப்பாகும். வரவிருக்கும் நாட்களில் சிங்களப்படைகள் செய்யப்போகும் பாரிய இன அழிப்புத் தாக்குதலுக்கு அரசியல் ரீதியாகவும் - ராணுவ ரீதியாகவும் சிங்களத்தைத் தயார்ப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இப்படி ஒரு போர்நிறுத்தத்தை ராஜபக்ஷே செய்துள்ளார். சந்திரகாசன் என்பவர் வெளிநாட்டில் இருந்து அரச சார்பற்ற ஒரு நிறுவனத்தை நடத்துபவர். இங்குள்ள மக்களின் மன உணர்வுகளையோ, அரசியல் நிலவரங்களையோ ஆழமாக விளங்கிக் கொள்ளாதவர். அவருடைய கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.”
தற்போதைய நிலையில் அங்குள்ள மக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது? இந்திய அரசு மருத்துவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களின் மருத்துவம் பயனுள்ளதாக இருக்கிறதா?
“வரவர இங்கு மக்களின் நிலைமை மிக மோசமடைகின்றது. சிங்களப்படையின் இனவெறித் தாக்குதலுடன், உணவுப்பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்கும் சிங்கள அரசு தடைசெய்துள்ளதால் காயமடையும் பலர் சிகிச்சையின்றி மடிகின்றார்கள். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. இந்திய மருத்துவர்கள் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டு நிலத்திலேயே தங்கியுள்ளனர். சிங்கள அரசின் விருந்தினர்களாகவே அவர்கள் உள்ளனர்.”
இந்நிலையில் தமிழக மக்களுக்கு என்ன கூறவருகிறீர்கள்?
“ஈழத்தமிழ் மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லாம் தொப்புள்கொடி உறவுகளான நீங்கள் எழுச்சிப் போராட்டங்களை நடத்தி மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருவது மட்டுமல்ல; உலக நாடுகளுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையினை எடுத்துச் சொல்லி வருகிறீர்கள். இதற்காக எத்தகைய சவால்கள், இடர்கள் வரினும் அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து சிறைக்கூடங்களுக்குச் சென்றுள்ளீர்கள். உண்ணாநோன்பிருந்துள்ளீர்கள். மாவீரன் முத்துக்குமார் போன்றவர்கள் தமது உயிரையே அர்ப்பணித்து முழு உலகத்திற்கும் எமது மக்களின் உரிமைக்குரலைப் பறைசாற்றி வருகின்றனர். எமது மக்களின் விடுதலைக்காக வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாகங்களை தொடர்ச்சியாகச் செய்துவருகிறீர்கள். எமது மக்கள் விடுதலை கிடைத்து சுதந்திரமான, சுபிட்ச வாழ்வை அமைக்கும்வரை உங்களது போராட்டம் தொடர வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
- குமுதம் ரிப்போர்ட்

-->

No comments: