Kadhai Alla Nijam

Wednesday, October 22, 2008

விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல: மருத்துவர் இராமதாஸ்

விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல: மருத்துவர் இராமதாஸ்
[செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 05:18 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]


மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல என்று தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று கூறி மத்திய அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது. கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கியதை நினைவில் கொள்ள வேண்டும்.
திபெத் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பயப்படவில்லை. தலாய்லாமாவுக்கு இன்றும் மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது.
இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழீழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். சிறிலங்காவுக்கு மத்திய அரசு அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும்.
ஒக்ரோபர் 29 ஆம் நாளுக்குள் இலங்கை பிரச்சினையை இந்தியா தீர்க்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்ற அனைத்து கட்சி தீர்மானத்தை ஏற்கிறேன். எங்கள் முதலமைச்சர் இலங்கை பிரச்சினையை ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்து செயற்படுகிறார்.
தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனை பின்பற்றுவோம்.
சிறிலங்கா அரசு அரசியல் தீர்வு காண்பதில் விருப்பம் தெரிவிக்கவில்லை. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக சிறிலங்கா அரசு செயற்படுகிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
கச்சத்தீவையும் சிறிலங்காவிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றார் இராமதாஸ்.
"இலங்கை தமிழர் பிரச்சினை தி.மு.க-பா.ம.க. இடையே மீண்டும் ஒற்றுமையை கொண்டு வருமா?" என்று ஒரு நிருபர் கேட்டார்.
அதற்கு மருத்துவர் இராமதாஸ் பதிலளிக்கையில், "இலங்கை தமிழர் பிரச்சினையில் மட்டுமே ஒற்றுமை" என்று பதிலளித்தார்
.

No comments: