Kadhai Alla Nijam

Thursday, October 23, 2008

பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் உடனடியாகப் போரை நிறுத்தி இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அதிபர் இராசபக்சேயுடன் தொலைபேசி மூலம் வற்புறுத்தியப் பிறகும் போரை நிறுத்த இலங்கை அரசு முன்வரவில்லை.போரை நிறுத்தும்படி இந்திய பிரதமர் தன்னிடம் கூறவில்லை என்றும் இராசபக்சே கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இந்திய அரசு தங்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். போரை ஒரு போதும் நிறுத்த முடியாதென இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்து விட்டதாகவும் இறுமாப்புடன் கூறியுள்ளார்.இராசபக்சேயின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபாய இராசபக்சே மேலும் ஒருபடி மேல் சென்று போர் நிறுத்தத்திற்கு ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார்.இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியான பொன் சேகா ‘இலங்கை சிங்கள புத்த நாடு. இதை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே இங்கே இடம் உண்டு’ என்று இனவெறியைக் கக்கியுள்ளார்.இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளோடு வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி அடிப்படையில் தீர்வுக் காணப்பட வேண்டும். இராணுவ ரீதியில் தீர்வு கூடாது என்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்பதை தொடர்ந்து பிரதமரும் அமைச்சர்களும் சொல்லிவருகிறார்கள். ஆனால் இராசபக்சே அரசு கூட்டாட்சி அடிப்படையையே ஏற்க மறுத்துவிட்டது.தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி ஒன்றுபட்டு நிறைவேற்றியத் தீர்மானங்களின் அடிப்படையில் இந்திய பிரதமர் இலங்கை அதிபருடன் பேசிய பேச்சு உரிய விளைவை ஏற்படுத்தாததோடு வல்லரசான இந்தியாவின் நியாயமான வேண்டுகோளைப் புறக்கணித்து இந்திய இறையாண்மைக்கு இராசபக்சே அறைகூவல் விடுத்திருக்கிறார். இந்தத் துணிவு அவருக்கு வருவதற்கு பின்னணியில் இந்தியாவிற்கு எதிரான சில நாடுகள் உள்ளன என்பது அப்பட்டமான உண்மையாகும். தமிழக மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உரிய, இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை இந்தியப் பிரதமர் மேற்கொள்ள வேண்டுமென தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இராசபக்சே அரசைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையை இழக்க பிரதமர் மன்மோகன்சிங் தயாராக இருக்கிறாரா என்பதுதான் தமிழக மக்கள் நடுவில் எழுந்துள்ள கேள்வியாகும்.

No comments: