Kadhai Alla Nijam

Tuesday, October 14, 2008

பழ. நெடுமாறன் ஆற்றிய உரை







14-10-2008 அன்று மாலை தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை :இலங்கையில் கடந்த 25 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் போரின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் உயிர் தப்பி சுமார் பத்து இலட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கும் உலக நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். உள்நாட்டிலேயே சுமார் 5 இலட்சம் தமிழர்கள் ஏதிலிகளாக அலைகிறார்கள்.இந்தியாவில் வங்காளி, பஞ்சாபி, மராத்தி, இந்தி மற்றும் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் வாழ்கின்றன. இந்த இனங்களைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் வாழ்ந்து அவர்களுக்கு இத்தகைய கதி ஏற்பட்டிருக்குமானால் ஒரு போதும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கொதித்து இந்திய அரசுக்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.ஈழத்தமிழர் பிரச்னை தீர்வதற்கு சுதந்திர தமிழீழம் அமைவதுதான் பரிகாரம் என்பது எங்களின் நிலைப்பாடாகும். ஆனால் இலங்கையில் மிக நெருக்கடியான சூழ்நிலை நிலவும் இந்தக் காலக்கட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று முதல்வரையும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.1. சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகள் செய்வதை இந்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்.2. இலங்கைக்கு இந்தியா வழியாக கப்பல்கள், விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும்.3. தமிழக மீனவர்களை கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து சுட்டுத் தள்ளும் சிங்களக் கடற்படை மீது எதிர் நடவடிக்கை எடுத்து நமது மீனவர்களைக் காப்பாற்றுவதற்குத் தவறிய இந்தியக் கடற்படைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.4. இலங்கையில் சிங்கள அரசின் பொருளாதாரத் தடையின் விளைவாக உணவு, மருந்து மற்றும் இன்றியமையாதப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் தமிழர்களுக்கு உடனடியாக உதவிப் பொருட்களை அனுப்புவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும். ஏற்கெனவே தமிழக மக்களிடம் நாங்கள் திரட்டிய ஒரு கோடி ரூபாய் பெறுமான உணவு மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக் கொண்டும் இந்திய அரசு அனுமதித் தரவில்லை. தமிழக முதல்வரும் இவற்றை அனுப்ப அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதன் விளைவாக ஒரு கோடி ரூபாய் பெறுமானப் பொருட்கள் வீணாகி விட்டன. ஆனால் இப்போது இங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமானப் பொருட்களைத் திரட்டித் தருவதற்குத் தயாராக இருக்கிறோம். அதை ஈழத்தமிழர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் முன் வர வேண்டும்.5. ஈழத் தமிழர்களை பட்டினிப் போட்டுக் கொல்லும் சிங்கள அரசுக்கு நமது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து தூத்துக்குடி மற்றும் பிற துறைமுகங்கள் வழியாக உணவுப் பொருட்களும் மற்றும் இன்றியமையாதப் பண்டங்களும் அனுப்பப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும்.மேற்கண்ட 5 கோரிக்கைகளை உள்ளடக்கியத் தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இதை நிறைவேற்ற இந்திய அரசு தவறுமானால் அதில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என எச்சரிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் ஈழத்தமிழர் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டங்களை பல முதலமைச்சர்கள் நடத்தி விட்டார்கள். அனைத்துக் கட்சித் தூதுக் குழுக்கள் தில்லி சென்று பிரதமரிடம் முறையிட்டுப் பார்த்தாகியும் விட்டது. எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. எனவே முதல்வர் உடனடியாக தில்லிக்குச் சென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஈழத்தமிழர் பிரச்னையை விளக்கிக் கூறி அவர்களின் ஆதரவோடு மத்திய அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.ஈழத் தமிழர் பிரச்னை எந்த ஒரு கட்சியின் பிரச்னையும் அல்ல. அது தமிழர்கள் அனைவரின் பொதுப் பிரச்னையாகும். எனவே கட்சி வேறுபாடுகளைக் களைந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவும் போராடவும் முன் வர வேண்டும்.

No comments: