Kadhai Alla Nijam

Thursday, March 12, 2009

தலித்துகளின் தலைமையேற்போம்! சமத்துவ தமிழ்ச் சமூகம் படைப்போம்!


கடலூர்,சிதம்பரம்,விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்றில் போட்டியிடக் கோரி தமிழ் தேசிய, சமூகநீதிப் போராளி திருமாவளவனுக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பின் அழைப்பு. ஈழத்தில் நடைபெறும் இன அழிப்புப் போர் முடிவுக்கு வராத நிலையில் இந்திய தேசத்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்றத் தேர்தலை தமிழர்கள் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள் சிக்கலைப் புறமொதுக்கி இத்தேர்தலில் தமிழக வாக்காளர்களை அரசியல் கட்சிகள் அணுக முடியாது என்பதைப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் உறுதிசெய்துள்ளன. இந்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட தமிழ் ஈழம்தான் நிரந்தரத் தீர்வு என்னும் தெளிவான இலக்குடன் அங்கு நடைபெறும் இன அழிப்புப் போரை நிறுத்துவதற்காக தொடர்ந்து போராடக்கூடிய தலைவர்களுள் ஒருவராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திகழ்கிறார். தமிழீழ அங்கீகார மாநாடு, இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி உண்ணா நோன்பு போராட்டம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அர்ப்பணிப்புடன்கூடிய பங்களிப்பு, நாம் தமிழர் இயக்கத்தின் மூலம் ஈழத்தமிழர் குறித்த பரப்புரை – நடைபயணம் போன்ற அவரது இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய் தமிழகத்தின் அரசியல் பார்வையை, போராட்ட எழுச்சியை ஒழுங்கமைக்கவும் கூர்மைப்படுத்தவும் உதவியிருக்கிறது. இதுவன்றியும் காவிரி, பாலாறு மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற தமிழர் நலன்களோடு இணைந்த அரசியல் சிக்கல்களுக்கான போராட்டம்; சாதி, தீண்டாமை ஒழிப்பிற்கான தீவிரமான போராட்டம்; பிற மாநிலங்களில் பிற நாடுகளில் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகும்போது அவர்களுக்கு ஆதரவான போராட்டம் என தனது அரசியல் பாத்திரத்தை ஒரு போராளிக்குரியதாக அமைத்து இயங்கிவரும் ஒரு தலைவராக திருமாவளவன் திகழ்கிறார். ஏகாதிபத்தியம், உலகமயமாதல், தனியார்மயமாக்கல் போன்ற அரசியல், பொருளாதார நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு; தனியார் துறை மற்றும் நீதித் துறைகளில் இட ஒதுக்கீடு; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினரது ஒற்றுமை; தமிழ் இன மொழி பண்பாடு காக்கும் முனைப்பு என அவரது அரசியல் அக்கறைகள் முற்போக்குத்தன்மை உடையவைகளாகத் திகழ்கின்றன. இதுவரை அடிமைச் சமூகமாக பல்வேறு இழிவுகளையும் இன்னல்களையும் அனுபவித்து வந்த மிகப்பெரும் தொன்மை வாய்ந்த இனக்குழுவான தலித்துகளிடமிருந்துதான் இந்திய-தமிழக அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும் என்பன போன்ற ஆரோக்கியமான சமூகநீதி விவாதங்கள் நடைபெற்று வருகின்ற சூழலில் இவ்விவாதங்களை ஒரு தேசிய உரையாடலாக்கிட வேண்டிய கடைமை எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இருக்கிறது. இதன் ஒரு தொடக்கச் செயல்பாடாக - ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக, சமூகத்தின் பன்முகத் தன்மையில் அக்கறை கொண்டவராக, தமிழ் தேசிய நலன்களில் கரிசனம் உடையவராக, ஈழத்தமிழர் விடுதலைக் குரலை உலகளவில் எடுத்துச் செல்பவராக, சாதி ஒழிப்புப் போராளியாக – ஒரு பன்முகத் தன்மையுடைய தலைவராக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசியலின் தலைமையேற்க தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது. கடலூர்,சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்றில் தமிழ் தேசிய ஆர்வலர்கள், சமூக நீதி - சாதி ஒழிப்பு ஆகிய தளங்களில் இயங்குபவர்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் போன்றோரது நல்லெண்ணத்தையும் மதிப்பையும் பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் எனும் விருப்பத்தை, அழைப்பை இவ்வறிக்கையின் மூலம் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு வெளிப்படுத்துகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதிகளுள் ஒன்றில் திருமாவளவன் போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு சாதீய அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இத்தொகுதி மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றுத் தரும் முயற்சியில் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு ஈடுபடும் எனும் உறுதியையும் இவ்வறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். ------------------------------------- மேற்குறித்த அறிக்கை சார்ந்து உரையாடவும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு அரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அரங்கம் நாள் : 13.03.09, மாலை 5 மணி.
இடம் : ஜெய் திருமண மண்டபம், விருத்தாச்சலம்.
தலைமை : கவிஞர். கரிகாலன்.
வரவேற்புரை : கவிஞர். இளந்திரையன்.
பங்கேற்பு ;
எழுத்தாளர். அஜயன் பாலா, கவிஞர். அசதா, கவிஞர். செழியன், கவிஞர். கண்டராதித்தன், கவிஞர். காலபைரவன்,
கவிஞர். வெ. வெங்கடாசலம், கவிஞர். இளங்கவியருள்,
கவிஞர். குமார்எடைக்கல், பொறியாளன் இதழ் ஆசிரியர் முகிலன், கவிஞர். மாதவன், எழுத்தாளர். சு.தமிழ்ச்செல்வி,
எழுத்தாளர். விழி.பா.இதயவேந்தன், எழுத்தாளர். அன்பாதவன், கவிஞர். இரத்தின புகழேந்தி,
எழுத்தாளர்.ஆயுத எழுத்து ஜோதி நரசிம்மன்,
கவிஞர்.”மாற்று”. சுந்தர பாண்டியன்,
கவிஞர். ஆறு. இளங்கோவன்,
கவிஞர். அமிர்தராசு,
ஓவியர். தமிழரசன்,
கவிஞர். ஹரிகிருஷ்ணா.
நன்றியுரை : கவிஞர். ஆழி.வீரமணி. ---------------

1 comment:

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

அன்புள்ள ஜோதி வலைபூ முழுதும் பார்த்தேன். ஈழச்செய்திகள் அதிகமுள்ள ஒரே வலைபூ உங்களுடையதாகத்தானிருக்கும்.வாழ்த்துகள்.பார்க்க மண்கவுச்சி http://mankavuchi.blogspot.com