Kadhai Alla Nijam

Thursday, August 20, 2009

சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் பிரகடனம்






ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்: உலகத் தமிழர் பிரகடனம்.
ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது. சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், தற்பொழுது நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.
உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :
1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு�கிறோ�ம்.
3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.
4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.
5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
6. அளப்ப�ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

No comments: