Kadhai Alla Nijam

Tuesday, January 10, 2012

ராஜிவ் கொலை
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம முடிச்சுகள் பற்றி அவர் வழங்கிய சிறப்பு பேட்டி.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்தாகுமா?

சென்னை உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர்ந்திருந்தோம். இந்த மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து ஏறக்குறைய 11 ஆண்டு காலமாகிவிட்டது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் சில தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தீர்ப்புத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு காலதாமதமானால் அது நிறைவேற்றப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கின்றது. இவர்கள் விசயத்தில் ஏறக்குறைய 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. தூக்குத் தண்டனை என்பது சில நொடிப்பொழுதில் உயிர் போய்விடும். ஆனால் 11 ஆண்டு காலம் இந்த மூவரும் தூக்கு மரத்தின் நிழலில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் துடிதுடித்து வாழ்ந்திருக்கிறார்கள். இதுவே இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. இதற்குமேல் ஒரு தண்டனை என்பது இயற்கை நீதிக்கு எதிரானது.

இரண்டாவது, அவர்கள் கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயுள் தண்டனை என்றாலும் கூட அது பத்து ஆண்டுகள்தான். இதற்கு மேலும் இன்னொரு தண்டனை என்பது ஒரே குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்றாகிவிடும். ஆகவே இது கூடாது என்பதுதான் எங்கள் வாதம். தற்போது எட்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை கிடைத்துள்ளது. எட்டு வாரம் கழித்து மீண்டும் விசாரணை நடக்கும்போது அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

கடந்த 11 ஆண்டுகளாக இவர்களின் கருணை மனுவைக் கண்டு கொள்ளாத குடியரசுத் தலைவர் திடீரென்று தள்ளுபடி செய்திருப்பதில் இலங்கையின் குறுக்கீடு எதுவும் இருப்பதாக நம்புகிறீர்களா?

இதில் இலங்கையின் குறுக்கீடு எதுவுமில்லை. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனையை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு பி.ஜே.பி. கட்சியின் சார்பில் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அதன் விளைவாக அதற்கு முன்னால் தூக்குத் தண்டனை பெற்ற அனைவரின் மனுக்களையும் எடுத்து முடிவு செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது. அதன் விளைவாகத்தான் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், அப்சல் குரு உட்பட அனைவரின் தூக்குத் தண்டனையையும் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று குடியரசு தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருக்க வேண்டும். இந்த அரசுக்கு அந்தத் துணிவும் இல்லை. ஏனென்றால் மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகப் பெற்ற நாடு இந்த நாடு. அவர் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் இந்தத் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் குற்றவாளிகள் உல்லாசமாக உலவுகிறார்கள் என்று கூறப்படுகின்றதே?

ராஜீவ் காந்தி படுகொலைக்கான விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே “விடுதலைப் புலிகள்தான் இதைச் செய்தார்கள்’ என்று அறிவித்துவிட்டுத்தான் புலன் விசாரணையைத் தொடங்கினார்கள். அதற்கு ஏற்றவாறு அவர்கள் வழக்கை ஜோடித்தார்கள். இந்தக் கொலை நடந்த மூன்றாம் நாள், விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் எழுத்தாளராக இருந்த கிட்டு இலண்டனிலிருந்து “இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றும், “உண்மையான கொலையாளிகள் பற்றி எங்களிடமும் சில தகவல்கள் உள்ளன. இந்திய அரசு என்னை அணுகினால் அவற்றையெல்லாம் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்’ என்றும் பகிரங்கமாகவே அறிக்கை கொடுத்தார். பத்திரிகைகளில் எல்லாம் இது வந்திருக்கின்றது. ஆனாலும் இந்திய அரசு சார்பில் அவரை அணுகவே இல்லை.

இரண்டாவதாக, இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓர் உயர் போலிஸ் அதிகாரி இலண்டனுக்குப் போனார். அங்கு சில ஆவணங்கள் அவருக்குக் கிடைத்தன. அவைகளும் பத்திரிக்கையில் வந்தன. ஆனால், இலண்டன் விமான நிலையத்தில் அவர் வைத்திருந்த அந்த ஆவணங்கள் அடங்கிய சூட்கேசை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்று அறிவித்துவிட்டார். இது பலமான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த வழக்கில் 26 பேரில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சார்ந்த ரெங்கநாத் என்பவர் சிவராஜனுக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான முதல் குற்றச்சாட்டு, அவரை அழைத்துக்கொண்டு சிவராஜன் டெல்லிக்குப் போயிருக்கிறார். இவரை வெளியே உட்கார வைத்துவிட்டு சந்திராசாமியைப் பார்த்திருக்கிறார். ஒரு தடவை அல்ல. இரண்டு தடவை. உள்ளே சந்திராசாமியுடன் என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது என்றும் ரெங்கநாத் சொல்லியிருக்கிறார்.

ஆனால், சந்திராசாமியைச் சந்தித்தது உண்மை என்று ரெங்கநாத் சொன்னபோது புலன் விசாரணை அதிகாரிகள் அதனைப் பதிவு செய்யாமல் அவரை சித்திரவதை செய்தார்கள். “இதை நீ வெளியே சொன்னால் உன் உயிர் போய்விடும்’ என்று அவரை அடக்கிவிட்டார்கள். பின்னர் அதை அவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலமாக தாக்கல் செய்தார். ஆனால் இன்று வரை சந்திராசாமியை விசாரிக்கவே இல்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது குறைந்தபட்சம் அவர் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் இதில் தொடர்புடையவர்கள் என ஒருவர் அல்ல, பல பேர் குற்றம் சாற்றி விட்டார்கள். ஆனால் இதுவரை நடக்கவில்லை. சந்திராசாமியின் சீடர்தான் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், ஆகையால் ராஜீவ் கொலையால் ஆதாயம் அடையக்கூடியவர்கள் யாரோ, அவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். அப்படியானால் ஆதாயம் அடைந்தது யார்? இந்தக் கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரிக்கவே மறுத்துவிட்டார்கள். ராஜீவ் கொலை யால் உடனடியாக ஆதாயம் அடைந்தவர் பி.வி. நரசிம்மராவ். இவர் பிரதமரான பிறகு சந்திராசாமி சம்பந்தமான கோப்புகள் திடீரென்று மாயமாகிவிட்டன. அந்தக் கோப்புகள் எங்கே போய்விட்டன என்று இதுவரைக்கும் விசாரிக்கவில்லை.

ஜெயின் கமிஷன் அறிக்கை அமைக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன?

ராஜீவ் கொலையில் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. அதை அவிழ்ப்பதற்காகத்தான் ஜெயின் கமிசன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிசன் தனது விசாரணையின் முடிவில், இன்னும் சில பேரை சி.பி.ஐ. விசாரிக்கத் தவறிவிட்டது என்றும், எல்லோரையும் இதில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. ஜெயின் கமிசனின் ஆணைக்கிணங்க ஒரு சிறப்பு புலன் விசாரணைக்குழு இந்திய அரசினால் அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழு இந்தப் படுகொலை நடந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் விசாரணையை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதையும் எங்கள் வாதத்தில் கேட்கிறோம். சிறப்புப் புலன் விசாரணைக் குழுவில் வேறு யாரோ சிலர் குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டால், இந்த மூவரையும் தூக்கில் போட்டுவிட்ட நிலையில் இவர்களின் உயிரைத் திருப்பித் தர முடியுமா? எனவே, அந்த விசாரணைக் குழு முடிவு வெளிவரும்வரை இதனை நிறுத்தி வையுங்கள் என்று நாங்கள் வாதாடி வருகிறோம்.

ராஜீவ் காந்தியின் கொலையில் அந்நிய சக்திகளின் தலையீடு உள்ளது என்று நம்பலாமா?

நிச்சயமாக உள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் ராஜீவ் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தபோது டெல்லி பத்திரிகையாளர்களிடத்தில் “சில அந்நிய சக்திகள் உங்களை ஒழித்துக்கட்ட திட்டமிட்டுள்ளதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று நான் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே ராஜீவ் காந்தியை எச்சரித்தேன். ஆனால், என்னுடைய எச்சரிக்கையை அவர் கவனத்தில் எடுக்காமல் போனதால்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது’ என்ற உண்மையைச் சொன்னார். இப்படிச் சொன்ன யாசர் அராபாத் பெரிய தலைவர் மட்டுமன்றி ஒரு நாட்டின் அதிபர். சி.பி.ஐ. அவரைச் சந்தித்து அந்த அந்நிய சக்திகள் யார் என்பதை விசாரித்திருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் அதை செய்ய தவறிவிட்டனர்.

இன்னொன்று, பிரேமதாசா மேல் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். பிரேமதாசா குடியரசுத் தலைவராக வந்தபின் இந்திய அமைதிப் படையைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ராஜீவ் காந்தி அதனை ஏற்கவில்லை. ஆகவே இந்த இரண்டு பேருக்கும் ஓர் உரசல் இருந்தது. ஒருவேளை ராஜீவ் காந்தி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகிவிட்டால் அவர் இந்திய அமைதிப் படையை ஒருபோதும் திரும்பப் பெறமாட்டார். நமக்குத் தொந்தரவு கொடுப்பார் என்ற அச்சத்தின் விளைவாக ராஜீவ் படுகொலை நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகமும் இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கிறது. ஆகவே, இதனை எல்லாம் தீர்க்கமாக விசாரிக்க வேண்டியது புலன் விசாரணைக் குழுவின் கடமை. ஆனால் இதையெல்லாம் அவர்கள் விசாரிக்கவே இல்லை. ராஜீவ் கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டார். அப்படியானால் பிரேமதாசாவின் படுகொலையில் இந்திய உளவுத்துறையின் கை இருக்கிறது என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விசாரிக்காமல் திரும்பத் திரும்ப விடுதலைப் புலிகள் மேல்தான் பழி சுமத்தப்படுகிறது.

இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, “ஒரு பெரிய மரம் வீழ்கின்றபோது அதைச் சுற்றியுள்ள நிலம் அதிர்வது இயற்கையே’ என்று ராஜீவ் காந்தி கருத்து சொன்னார். இம்மாதிரியான மனநிலையில்தான் ஈழத் தமிழர் படுகொலை விசயத்திலும் காங்கிரசார் நடந்து கொள்கிறார்களா?

காங்கிரசாரைப் பொறுத்தமட்டில் உண்மையை அறிந்து கொள்வதைவிட பக்தி விசுவாசத்தைக் காட்டுவதுதான் அவர்களுக்கு மிக முக்கியம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மீது தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதற்காக அவர்கள் எதையாவது பேசுவார்கள். ராஜீவ் காந்தி கொலை இருக்கட்டும். அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய விசயம். ஆனால், இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி 7000 அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது பற்றி இந்தக் காங்கிரஸ்காரர்கள் யாராவது கவலைப்படுகிறார்களா? நிச்சயம் கவலைப்பட மாட்டார்கள். மேலும் இந்தப் படுகொலை விசயம் இவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே! குதிரைக்குக் கடிவாளம் போட்டது போன்று அவர்கள் இரு விழிகளையும் மூடிக்கொண்டு, உண்மையைப் பார்க்கவோ அல்லது அது பற்றி தெரிந்து கொள்ளவோ மறுக்கிறார்கள்.

தீர்ப்பு நாளில் உயர் நீதிமன்ற வளாகமே உணர்ச்சியால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த உயிர் காக்கும் போராட்டத்தில் தமிழக மக்களின், தமிழக உணர்வாளர்களின் எழுச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இருபது ஆண்டு காலமாக இந்த வழக்கைப் பற்றி வெளியான பல தகவல்கள் தமிழக மக்களை உண்மையை தெரிந்து கொள்ள வைத்திருக்கின்றன. நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் இவர்கள் அநியாயமாகத் தூக்கிலிட முயற்சிக்கிறார்கள் என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். அதனால்தான் இப்படிப்பட்டதொரு எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கொலை வழக்கில் சென்னை தடா நீதிமன்றம் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. உலகத்திலேயே ஒரு கொலைக்கு 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த சம்பவம் இது ஒன்றுதான். வேறு எந்த வழக்கிலும் இது செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் இந்த வழக்கை எடுத்துச் சென்றதன் விளைவாக 19 பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டார்கள். 3 பேருக்கு ஆயுள் தண்டனை. ஆக மொத்தம் 22 உயிர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம்.

நாங்கள் இப்போது கேட்கிற கேள்வி, சென்னையிலுள்ள தடா நீதிமன்றத்தில், 22 ஆண்டுகளாக என்னென்ன சாட்சியங்கள், வாதங்கள் வைக்கப்பட்டனவோ அதை வைத்துதான் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே வாதங்களையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துத்தானே 19 பேரையும் விடுதலை செய்தது. அப்படியென்றால் நீதியில் ஏதோ கோளாறு இருப்பதாகத்தானே இதற்கு அர்த்தம்? அது எப்படி நடக்கிறது? அவர்களுக்காக நாங்கள் வழக்கு நடத்துவதற்கு நிதி திரட்டி இந்த வழக்கை நடத்தியதால் 22 பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. வழக்கு நடத்த முடியாமல் போயிருந்தால் அநியாயமாக இந்த 22 உயிர்களும் பறிக்கப்பட்டிருந்திருக்கும். ஆகவே, நீதி என்பது ஏழைகளுக்கு அல்ல, வசதி படைத்தவர்களுக்கும், உயர் சாதிக்காரர்களுக்கும்தான் என்றாகிவிட்டது.

இந்த விசயத்தில் பல நாட்களாய் மெளனம் சாதித்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பு குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாய் அமையும் என்பதை யூகித்துதான் முதல்வர் கடைசி நிமிடத்தில் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் என்றும் சொல்லப்படுகிறதே!

என்ன காரணத்திற்காக நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க, வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம். இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

இவர்கள் மூவரின் உயிர் காக்கும் விசயத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனரே. இதில் யார் சொல்வது உண்மை?

இந்த விசயம் மட்டுமல்ல, எந்தவொரு விசயமாக இருந்தாலும் இந்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிரும் புதிருமாக நிலைப்பாடு எடுத்து மோதிக்கொள்வதையே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி நினைத்திருந்தால் இவர்கள் மூவரின் உயிரையும் காப்பாற்ற முயற்சித்திருக்கலாம் என்று ஜெயலலிதா கூறுகிறாரே? அது உண்மையா?

உண்மைதான். ஏனென்றால், அப்பொழுது தமிழக ஆளுநராக இருந்த செல்வி பாத்திமா பீவீயிடம் நாங்கள் கருணை மனு கொடுத்தோம். அவர் அதை ரத்து செய்துவிட்டார். நான் உடனே வி.ஆர். கிருஷ்ண அய்யரைத் தொடர்பு கொண்டு “இந்த மாதிரி ஆகிவிட்டதே! என்ன செய்யலாம்?’ என்று கேட்டபோது, “உயர்நீதி மன்றத்தில் உடனே வழக்குப் போடுங்கள்’ என்று சொன்னார். இன்று நீதியரசராக இருக்கக்கூடிய சந்துருதான் அன்று எங்கள் வழக்கறிஞராக வாதாடினார். ஆளுநராக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந்தாலும் மரண தண்டனையைப் பொறுத்தவரையிலே அல்லது எந்தத் தண்டனையாக இருந்தாலும் மாற்றுதலுக்கான அதிகாரம் அவர்களுக்குக் கிடையாது. சம்பந்தப்பட்ட அமைச்சரவை என்ன பரிந்துரை செய்கிறதோ அதை ஏற்றுச் செயல்பட வேண்டியவர்கள்தாம் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும்.

எனவே, ஆளுநர் போட்ட உத்தரவு செல்லாது என்பதுதான் எங்களுடைய வாதம். அதை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு ஆளுநரின் உத்தரவை செல்லாததாக்கிவிட்டது. ஆகவே, அந்த நான்கு பேரின் கருணை மனுவை மீண்டும் முடிவு செய்கிற அதிகாரத்தை உயர் நீதிமன்றம் மூலம் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்குப் பெற்றுக் கொடுத்தோம். இந்தியாவிலேயே இது முதல் தீர்ப்பு. அது மட்டுமன்றி, இந்த நால்வருக்கும் இரக்கம் காட்டுங்கள் என்று 25,00,000 பேரிடம் கையெழுத்துப் பெற்று 50,000 மக்களைத் திரட்டி என் தலைமையில் ஊர்வலமாகச் சென்றுதான் இதனை கொடுத்தோம்.

இதைச் செய்கிறேன் என்று சொன்ன கருணாநிதி செய்யவில்லை. ஆனால், நளினிக்கு இரக்கம் காட்டும்படி சோனியா காந்தி கடிதம் எழுதியதால் நளினிக்கு மட்டும் செய்தார். அன்றைக்கே இவர் அந்த நால்வருக்கும் செய்திருந்தால் பிரச்சினையே கிடையாது. இந்தச் சிக்கலும் வந்திருக்காது. ஆனால் கருணாநிதி அப்போது அதைச் செய்யவில்லை.

இந்த விசயத்தில் முதல்வரால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெயலலிதா தொடக்கத்தில் ஏன் கைவிரித்தார்?

அந்த அம்மையாருக்கு அதிகாரிகள் சரியாக வழிகாட்டவில்லை. அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதே அரசியல் சட்டத்தில் 9வது பிரிவில் ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு உள்ள அதிகாரம் என்பது இறைமையுடைய அதிகாரம். அதில் யாரும் தலையிட முடியாது. மத்திய உள்துறை செயலாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அதில் குடியரசுத் தலைவர் ஒரு முடிவு செய்துவிட்டால் அதை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது என்று வாதிடுகிறார்கள். ஆளுநருக்கு உள்ள அதிகாரம் என்பது நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய் டர்ஜ்ங்ழ். உள்துறை செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்பது ஊஷ்ங்cன்ற்ண்ஸ்ங் டர்ஜ்ங்ழ். இந்த இரண்டில் எவராலும் மாற்றப்பட முடியாத நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய் டர்ஜ்ங்ழ், (இறைமையுடைய) அதிகாரம் தான் உயர்ந்தது. ஆளுநரே நினைத்தாலும் இதனை மாற்ற முடியாது. காரணம் இது அரசியல் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டடிருக்கின்ற அதிகாரம். ஊஷ்ங்cன்ற்ண்ஸ்ங் டர்ஜ்ங்ழ்யைப் பொறுத்தளவில் மாற்றப்படக் கூடியது. இன்னொரு உள்துறை செயலர் வந்தால் இதனை மாற்றிக் கொள்ளலாம். ஆக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இவர்கள் சரியான தகவலைக் கொடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து.

மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. ஆனால் குற்றம் செய்பவர்களுக்கு இது சாதகமாய் அமைந்துவிடும் என்ற எதிர்வாதமும் வைக்கப்படுகின்றதே! இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது ஒரு தவறான கருத்து. 147 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று ஐ.நா.வும். தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளிலெல்லாம் குற்றங்கள் அதிகமாகிவிட்டனவா? இல்லையே! ஆனால் மரண தண்டனை இருக்கின்ற இந்தியாவில்தான் கொலைக் குற்றங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்த்ததால் அது தவறு. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனால் இந்திரா காந்தியைக் கொல்ல தயங்கினார்களா என்ன? அதை நம்மால் தடுக்க முடிந்ததா? இல்லையே! இவைகள் வெவ்வேறு காரணங்களினால் நிகழ்கின்றன. அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளும் மரண தண்டனையை ஒழித்துவிட்டன.

இயேசு பிரான் பாதையை உண்மையாக அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், மகாவீரர், புத்தர், காந்தி ஆகிய மகான்கள் வாழ்ந்த இந்தியாவில் இதுமாதிரியெல்லாம் பேசுவது மிகவும் தவறு. ஆகவே, குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்ற சமுதாயத்தின் சூழல்களை மாற்றினாலே குற்றங்கள் குறைந்துவிடும்.

நன்றி : -நம்வாழ்வு-

No comments: