Kadhai Alla Nijam

Thursday, February 2, 2012



சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்

குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்.

சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.

அணு சக்தியும் அணு ஆயுதங்களும் வேறு வேறு அல்ல

இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.

1988 லிருந்து துவங்கப்பட்ட கூடங்குளம் இரட்டை அணுவுலைகளுக்கெதிரான போராட்டம் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அணுசக்தித் துறையின் போராட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்கள், மக்களை சாதி ரீதியில் பிரித்து போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் அரசாங்க உத்திகள் இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் இப்போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளனர். அணுக்கொள்கையில் அரசாங்கத்தின் பிடிவாதமும், இந்திய பிரதமர் ரஷ்யா சென்று அணு வுலைகள் தொடர்பாக செய்த அறிவிப்பும் மேலும் இப்போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ள இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து வருபவர் சுப. உதயகுமார். தொடர்ந்து அணுசக்தியும், அணு ஆயுதங்களுக்கும் எதிராக குரல் கொடுத்துவரும் சுப. உதயகுமார் காந்திய வழியில் போராடி வருபவர். காந்தியத்தின்பால் நம்பிக்கை கொண்டவர். நாகர்கோவிலுள்ள இசங்கன்விளை என்னும் ஊரைச் சார்ந்த உதயகுமாரை குமுதம் தீராநதீ நேர்காணலுக்காக, 02.12.2011 அன்று இடிந்தகரையில் சந்தித்துப் பதிவு செய்த உரையாடல் இது.

தீராநதி: உங்களுடைய இளம்பிராயம் பற்றிச் சொல்லுங்கள்?

உதயகுமார்: நான் பிறந்தது நாகர்கோவில்ல கோட்டார் பகுதியில் உளள இசங்கன்விளையில். அப்பா திகவிலும் பின் தி.மு.க. விலும் தீவிரமாக தீவிரமாக இருந்தவர். அப்பாவின் பெயர் பராமார்த்த லிங்கம். அப்பா எங்க ஊர் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் கோட்டையில் அப்பா பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் பேசக்கூடியவர். பொதுக்கூட்டங்கள் நடத்துவாங்க. பெரும்பாலான கூட்டங்கள் அப்போது வன்முறையில்தான் முடியும். அப்பாவை அடிக்க வருவாங்க. அப்போ நானும் தங்கச்சிகளும் கூட நின்று பாதுகாப்போம். அப்படி இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.

அம்மா கல்லுப்பட்டியில் காந்திய ஆஸ்ரமத்தில் படிச்சாங்க. அவங்களுக்குச் சொந்த ஊர் நாகர்கோவில், ராமன்புதூர் காந்தியத்தில் ஆழமான பிடிப்பு அம்மாவுக்கு உண்டு. எஸ்பொன்மணி அம்மாவின் பெயர். அம்மா ஒரு காமராஜர் பக்தை. காங்கிரஸீக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க ஆதரிப்பாங்க நேர் எதிர்நிலையில் அப்பா திராவிட சிந்தனை கொண்டவர். ஆனால் வீட்டுக்குள்ள எல்லாம் ஐனநாயக முறைப்படித்தான் நடக்கும். அப்பா யாருக்கும் ஓட்டுப்போடச் சொல்ல மாட்டாங்க. அம்மாவும் சொல்ல மாட்டாங்க. வீட்டுக்கு முன்பு பெயிர காமராஜர் படம் இருக்கும். அப்பா பெரியார், அண்ணா படங்களை வீட்டில் வைத்திருப்பாங்க. எனினும் ஒரு ஐனநாயகச் சூழலில் தான் நாங்க எல்லோரும் வளர்ந்தோம். அம்மா, அப்பா இரண்டுபேரும் பொது வாழ்க்கையில் ரொம்ப ஆர்வமாக இருந்தாங்க. அம்மா சமூக நலத்துறையில் பணிபுரிந்ததால் இந்தக் கணக்கு வழக்கு எழுதுவதற்காக பால்வாடி மற்ற பிற இடங்களிலிருந்து கிறிஸ்துவப் பெண்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் அவர்கள் பிரார்த்தனை செய்வாங்க. என்னையும் செய்யச் சொல்வாங்க அதன் மூலமாக சிறு வயதிலிருந்தே கிறிஸ்துவ மதத்தின் மீது மரியாதை இருந்தது. ஆனால் நடைமுறையில் பழக்கவழக்கத்தில் நாங்கள் இந்துவாக இருந்தோம். சுடலை மாடசாமி கோயிலிருந்து இசக்கியம்மன் கோயில் வரை ஒரு கோயிலையும் அம்மா விடமாட்டாங்க. எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சுடலைமாடன் கோயில, முத்தாராம்மன் கோயில் எல்லாம் உண்டு. கொடைவிழாக்களுக்கு அந்தக் கோயில்களுக்கு வரிகொடுத்து வந்தோம். அப்பா தி.கங்கறதுனால அவருக்கு இவற்றில் பிடிப்பில்லை. இவற்றிலிருந்து அவர் விலகியிருந்தார். ஆனாலும் அம்மாவோடும் எங்களோடும் அவர் கூட வருவார். அப்பா விபூதி, சந்தனம் எதுவும் பூசமாட்டாங்க. பூஜையில் பங்கெடுக்கமாட்டாங்க.

தீராநதி: முறைசார்ந்த கல்வி, முறைசாராத கல்வி பற்றிக் கூறுங்கள்?

உதயகுமார்: எதிரும் புதிருமாக இருந்தாலும் சேர்ந்து வாழணுங்கற நிலைப்பாடும் எங்களுக்கு காந்தியத்தின் மீதான நம்பிக்கையும் எல்லாமே அம்மாவிடமிருந்து வந்ததுதான். துவக்க கல்விக்குப்பின் நாகர்கோவில் டி.விடி. மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தமிழ் மீடியம் படிச்சாலும் எனக்கு ஆங்கிலத்தில் ஈடுபாடு உண்டு. சுவாமிதாஸ்னு ஆங்கில ஆசிரியர் இருந்தார். அவரிடம் ஆங்கில டியூஷன் போவேன். கல்லூரிப் படிப்பு பயோனியர் குமாரசுவாமி கல்லூரி பொறியியல் படிக்க வேண்டுமென அப்பா ரொம்ப விரும்பினாங்க. எனக்கு கடுகளவும் அதில் விருப்பமில்லை. எபனேசர் பால்ராஜ்ன்னு ஒரு பேராசிரியர் இருந்தார். குமாரசுவாமி கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியர். அவங்க இன்ஜினீயரிங் உனக்கு ஒத்து வராதுன்னு சொன்னாங்க. அது சரிதான். அவர்தான் எனக்கு குறிக்கோள் ஊட்டினார். நீ சமூக அறிவியல் படின்னு சொல்வாங்க. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முயற்சி செய்யும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எத்தியோப்பியால பள்ளி ஆசிரியர் வேலைக்கு விளம்பரம் வந்தது. வேலைக்குப் போனேன். அப்போ கம்யூனிஸ சித்தாந்தத்தில ஈடுபாடு இருந்தது. வீட்டுல அப்பா நிறைய புத்தகங்கள் வச்சிருப்பார். லெனிபைப் பற்றி, மார்க்ஸ் பற்றி, மூலதனம் பற்றி அப்பாகிட்ட அது தொடர்பா கேள்விகள் கேட்டிருக்கிறேன். அப்பாவும் தி.க. பெரியாரிய, கம்யூனிஸ சிந்தனை உள்ளவங்கங்கறதுனால நிறைய விவாதித்திருக்கிறோம்.

எத்தியோப்பியாவுக்குப் போன பின்னர் தான் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதைப் படித்தேன், பார்த்தேன். மெங்கிஸ்ட் ஹெலமெரியம் என்கிற ஒருத்தர்தான் எத்தியோப்பியால ஆட்சியாளரா இருந்தார். ராணுவ ஆட்சியாளர் படுபயங்கரமான இரும்புக்கரத்தோட அந்த நாட்டை ஆட்சி செய்தார். தனி மனித சுதந்திரம் அங்கு சுத்தமாகக் கிடையாது. ரொம்ப இறுக்கமாக ஒருங்கிணைந்து மக்கள் மூச்சுவிடமுடியாத அளவுக்கு நெருக்கி வச்சிருந்தாங்க. அப்ப சோவியத் யூனியனின் நெருங்கிய நாடாக எத்தியோப்பியா இருந்தது. கம்யூனிஸம் அமல் ஆனா இப்படித்தான் இருக்கும் என்பதை அங்குதான் பார்த்தேன். அப்ப சோவியத்தில் பிரஷ்நேவ் ஆட்சியாளர். இது எண்பத்தொன்று எண்பத்தேழுகளிலிருந்த நிலை. ஹெலமெரியம் எல்லா சோசலிஸ்ட் நாடுகளுக்கும் போவாரு. அந்த நாட்டுத் தலைவர்கள் இங்க வருவாங்க. அந்த நாடுகளிலிருந்து நிறைய உதவிகள் கொடுப்பாங்க. இவையெல்லாம் எனக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் பற்றிய கல்வியாக இருந்தது. கம்யூனிஸ அரசாங்கம் என்பது நாம் நினைக்கிற மாதிரி சுதந்திரமான அதிகார மையமாக இருக்காது. ஒரு குழு பிறரை ஒடுக்கக்கூடிய மற்றொரு அதியார மையமாகத்தானிருக்கும் அப்படின்னு தெரிந்தது. 81, 87 வரையில் அங்கிருந்தேன். அங்க ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இருந்தபோது யுனெஸ்கோ கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்தேன். அகில உலக புரிதலைக் கொண்டு செல்வதற்காக அதுவொரு உலகளாவிய இயக்கம். அரசாங்கத்துக்கு இந்த இயக்கம் தர்ம சங்கடமாக இருந்தது. நடத்தாதன்னு சொல்ல முடியல. யுனெஸ்கோ கூரியர் இந்த இயக்கம் நடத்திய இதழ்தான். உலகம் முழுவதும் சமாதானம் சுற்றுப்புறச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளை அது உலகம் முழுக்கக் கொண்டு சென்றது.

தீராநதி: இளமையிலேயே எப்படி இயக்கத்திற்கான தூண்டுதல் ஏற்பட்டது?

உதயகுமார்: கல்லூரி வாழ்க்கையின்போது மாணவர் அமைப்பை வைத்திருந்தோம். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் கூட்டங்களுக்குச் சென்று வந்தோம். ஆனால் அவங்க பேசியது எதையுமே எங்களுக்குப் புரிஞ்சுக்க முடியல. அவங்க அவ்வளவு உயர் தமிழிலி பேசினாங்க நாங்க எறும்புகள்னு ஒரு அமைப்பை ஆரம்பித்தோம். நானும் அகம்மது ஹமீர் ஒரு இஸ்லாமிய நண்பர், இளங்கடை ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து வாரந்தோறும் கூட்டம் போடுவோம். இலக்கியக் கூட்டங்கள்தான். அப்போது எங்க பேரைக் கூட எறும்புகள்னுதான் போடுவோம். எறும்புகள் உதயகுமார், எறும்புகள் ஜெயக்குமார் இப்படி காகங்களில் எங்களைச் சேர்க்க முடியல. எங்களால சேர்ந்துக்க முடியல என்பது உண்மை.

பிறகு இயக்கம் ஒன்றை நாங்க ஆரம்பித்தோம். அப்ப இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் கப்பற்படைகள் எல்லாம் நிலைகொண்டிருந்தன. இப்படியிருந்தா நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்னு அந்நியப் படைகள் வேளியேற வேண்டுமென்று குரல் கொடுத்தோம். அப்பகுதியில் இவங்களுக்குள்ள ஒரு அணு ஆயுத யுத்தம் வந்தால் நாமெல்லாம் அழிந்து போவோம். இந்து மகா சமுத்திரத்தில் அந்நிய கப்பற்படைகள் நிற்கக்கூhது அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வமைப்பில் தீர்மானம் போட்டோம். வித்தியசமான ஒரு குழு எங்கள் குழு உலகளாவிய விஷயங்களில் ஆர்வம் காட்டினோம். அது முக்கியமான காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் முதன்முதலாக நாங்கள் அணுசக்தி பற்றிப் பேச ஆரம்பித்தோம். அணுசக்தியும் அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று உறவு கொண்டவை என்பதை இணைத்துப் பேசினோம்.

தீராநதி: உங்களுடைய அரசியல் சார்பு நிலை கட்சிகள் சார்ந்து இருந்ததா?

உதயகுமார்: எதுவும் கிடையாது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். உறுப்பினரெல்லாம் இல்லை. ஈடுபாடு இருந்தது. யுனெஸ்கோ அமைப்பை எத்தியோப்பியாவில் ஆரம்பித்ததை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அரசியல் கல்வியை அங்க பாடத்திட்டத்திலேயே சொல்லிக் கொடுப்பாங்க. அவற்றில் மேற்கத்திய நாடுகளில் எதுவும் கிடையாதுங்கிற மாதிரி பாடங்கள் இருக்கும். அரசியல் கல்வியை நானும் அந்த மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறேன்.

அங்கே என்னுடைய சம்பளத்தையே யுனெஸ்கோ தான் கொடுத்தது. யுனெஸ்கோ கிளப்பில் மாணவர்களைத்தான் தலைவராய் நியமிப்போம். செயலாளர், பொருளாளர் எல்லாம் மாணவர்கள்தான். ஒவ்வொரு வாரமும் கூட்டங்கள் நடத்துவோம். பிற தூதரகங்களுக்குக் கடிதம் எழுதி தகவல்கள் வாங்கி அதனை வெளியிடுவோம். தொடர்ந்து மாணவர் இதழ் ஒன்றை கையெழுத்துப் பிரதியாகக் கொண்டு வந்தோம்.

இந்த நடவடிக்கைகள் எத்தியோப்பிய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியது. அரசாங்கம் எங்களைக் கண்காணிக்க மாணவ ஒற்றர்களை நியமித்திருந்தது. அவர்கள் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரா பேசுறோம் என்கிற செய்தி பரவி, அரசாங்கம் சந்தேகப்பட்டது. மீண்டும் அடுத்த ஒப்பந்தத்தில் மீண்டும் எத்தியோப்பியாவில் ஆசிரியர் வேலையிலிருந்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிரவம் என்கிற நிலைமை. அதனால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் திரும்பி வந்துவிட்டேன்.

தொடர்ந்து யுனிவர்சிட்டி ஆஃப் நோட்டர் டேம்ல சமாதானத்திற்கான ஆய்வு பற்றிப் படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்தது. என்னைப் பரிந்துரை செய்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பெண்மணி. அவர்களை 1986-ல் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கில் கட்டுரை படிக்கும் போது சந்தித்தேன். உன்னைப் பரிந்துரை செய்திருக்கிறேன். அட்மிஷன் கிடைத்து உனக்கு விருப்பமும் இருந்தால் போ என எழுதியிருந்தார்கள். நானும் அந்தக் காலகட்டத்தில் குழப்பத்திலிருந்தேன். தங்கை ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பெரிய தங்கைக்குத் திருமணத்தில் சில பிரச்னைகள் இருந்தன. அப்போ எனக்கு ஊரில் இவற்றைத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை. 89ன் பிற்பகுதியில் பிரச்சினைகள் ஓரளவு சரியான பின் ஆஸ்திரேலிய அழைப்பை ஏற்று அங்க போயி எம்ஏ பண்ணினேன். பயணச் செலவு, படிப்புச் செலவு உணவுச் செலவு, தங்கும் செலவு எல்லாம் அவங்க கொடுத்தாங்க. அதோடு கைச் செலவுக்கு 100 டாலர் கொடுத்தாங்க. பதினைந்து நாடுகளிலுள்ள பதிமூன்று ஆண்களும் பெண்களும் ஒரே கட்டடத்தில் தனித்தனியறையில் தங்கியிருந்து படித்தோம். அந்த இடத்தின் பெயரே பீஸ் அவுஸ். அப்போ என்னுடைய பேராசிரியர் ஒருவர் யுனிவர்சிட்டி அவாய்ல வேலை பெற்றுத் தந்தார். ஒரு பேராசிரியருக்கு ஆய்வு உதவியாளராக வேலை செய்தேன். பின்னர், அங்கு தான் பிரசின்டிங் த பாஸ்ட் என்கிற என்னுடைய பி.எச்.டி ஆய்வுப் படிப்பையும் முடித்தேன்.

நம்முடைய சரித்திரத்தை ஆர்எஸ்எஸ், பிஜேபி. விஎச்பி எப்படி அரசியல் அதிகாரத்திற்காக மீள்உருவாக்கம் செய்றாங்க என்பது தான் எனது பிஎச்டி ஆய்வு. எம்.ஏ ஆய்வு இலங்கை பிரச்னை பற்றியது. அதை புத்தகமாகவும் அமெரிக்காவுல வெளியிட்டிருக்காங்க. பிச்டி ஆய்வுல என்ன பண்ணினேன்னா ராமாயணம், மகாபாரதம். ராம்ஜென்ம பூமி, ராம் ரக்ஷா, காந்தியின் ராம் ராஜ்யம் இவற்றையெல்லாம் இணைத்து வல்லரசாகனும் அணு ஆயுதம் தயாரிக்கணும் என்கிற கருத்து இந்திய அரசுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தி எழுதியிருந்தேன். பிஜேபி அரசு வரும்போது நானும் இந்து பத்திரிக்கை ஆசிரியர் என் ராமும் சேர்ந்து பிஜேபி அரசு கண்காணிப்பகம் ஆரம்பிச்சோம். அப்ப இந்தியாவில் பத்துப் பதினைந்து அறிவு ஜீவிகளுக்கு பிஜேபி ஆட்சி வந்தபின் நிலைமை என்னவாக மாறும் என்பதைப் பற்றி எழுதினேன். ராம் உடனடியாகத் தொடர்பு கொண்டு நீ சொல்வது உண்மை என்றால் அறிஞர்கள் பங்கெடுக்கிற மாதிரி ஒரு விவாத மேடை அமைப்போம் என்றார். உடனே ஒரு இணையதளத்தை அதற்காக ஆரம்பிச்சோம். அமெரிக்காவுல இருந்தபடியே பண்றதுக்காக ஆறு வருடம் விஎச்பி ஆர்எஸ்எஸ். பிஜேபி பற்றி நிறைய படித்தேன். உளவியல். சமூகவியல் அரசியல் எல்லாம் படிச்சதால அது நம்பிக்கையாகவும் உதவியாகவும் அமைந்தது. கேஎன் பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏஜி நுரானி, ஆஸ்கர் அலி இன்ஜினியர் அப்படி இதில் நிறையப் பேர் இணைந்தார்கள். நிறைய விவாதங்கள் நடந்தன. பத்திரிகையில் இதுபற்றி செய்தி வந்தது. ராமுக்கும் எனக்கும் கொலைமிரட்டல் வந்தது. இவையெல்லாம் பிஜேபி அரசு கீழே விழும் வரையில் நடந்தது. அந்த அரசு விழுந்தவுடனே அதையே கம்யூனிசம் வாச், கவர்ன்மெண்ட் மானிட்டர் என மாத்தினோம். இதெல்லாம் என்னுடைய அரசியல் பின்னணி.


நோம் சாம்ஸ்கியை நேரில் பார்த்ததில்லை. அவரது நூல்கள் வாசித்திருக்கிறேன். யொகான் கால்டும் சாம்ஸ்கியை போன்றே அமெரிக்காவை விமர்சனம் செய்கிற அறிஞர் ஆவார். அவர்தான் என்னுடைய பேராசிரியர். அவர் ஒரு குழு ஆரம்பித்தார். அதில தொடக்கத்திலிருந்து பவுண்டிங் உறுப்பினரா யிருக்கிறேன். அதற்காக இணையத்தில் எல்லா வருடமும் இரண்டு வகுப்புகள் பாடம் நடத்துறேன்.
காந்தியத்தோடு இருந்த ஈடுபாடு அம்மாவிடமிருந்து வந்தது. பின்னால காந்தியம் பற்றி நிறைய படிக்க ஆரம்பிச்சிட்டேன். உலக சமாதானம், அமைதி போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட்டது. அமெரிக்கா போன பிறகு ஆசிரியர் தொழிலும் இதுவாகவே அமைந்தது. அகிம்சை பற்றி நிறைய வகுப்புகள் எடுத்தேன். ஜான் வயோடர்ன்னு ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் ஒரு வகுப்பு நடத்தினார். அந்தப் பாடத்தை நான் எடுத்தேன். அவாயில இவரைப்போன்றே மைக்கல் ட்ரு கிலன் பேஷ் இரண்டு பேருமே அகிம்சை வழியில் முன்னோடியாய் இருந்தார்கள். இந்தியாவில் இருக்கும்போதும் நிறைய காந்திய ஆசிரமங்களுக்குப் போயிருக்கிறேன்.

வீட்டுல சின்ன வயசுல ஒரு விளக்கின் முன்பாக காந்தி ஆசிரமப் பாடல்களைத்தான் பாடுவோம். பஜனைப் பாடல்களை அம்மா பாட வைப்பாங்க. அம்மா கிராம சேவிகா வேலையிலிருந்தாங்க. ஓய்வு பெறும்போதும் மாவட்ட அதிகாரியாக ஓய்வு பெற்றாங்க.

இந்திய மார்க்சிஸ்ட் குழுக்கள் சின்ன வயதுல ரொம்ப கவர்ச்சியாக இருந்தது. எண்பத்தேழுகளில் நார்வேயில் படிக்கப் போயிருந்தேன். முடிச்சிட்டு வரும்போது சோவியத் வழியாக வரும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் மார்க்சிய அரசு பற்றிய எனது கற்பனையை உடைத்தது. நம்ம நாட்டில் உள்ள வளம்கூட அங்கு இல்லை. செழிப்பில் அது அதிருப்தியைத் தந்தது. மக்களை இறுக்கமாக ஒருங்கிணைத்து வச்சிருந்தாங்க. மாஸ்கோ நகரத்தில் அனுமதித்த வழியாகத்தான் போக முடியும். இறுக்கமான கண்காணிப்பு வேறு எவரும் போகமுடியாது. இதையெல்லாம் பார்த்திட்டு அந்த சிந்தாந்தமே சரியில்லன்னு ஆகிப்போச்சு எனக்கு. அதனால் மார்க்சியத்தைக் குறை சொல்லல. எப்படி காந்தியத்தை நேரு இந்தியாவில் அழகாக கொலை செய்தாரோ அதுபோல கம்யூனிசத்தை ஸ்டாலின் வகையறாக்களும் கொன்னுட்டாங்க.

அப்பா தி.க. திமுகன்னு இருந்ததால இவ்வியங்கங்களும் ஆதிக்கமற்ற சமுதாயம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றெல்லாம் சொல்வாங்கல்ல? கம்யூனிச வாடையோடு சமத்துவம் அது இதும்பாங்கல்! அதனால அவங்க பேர்லயும் ஒரு கற்பனை இருந்தது. பின்னாடிதான் அவங்களுக்கும் இதுக்கும்மெல்லாம் ஒரு சம்பந்தமும் கிடையாதுன்னு தெரியவந்தது. 2001ல திரும்பி வந்த பிறகு அரசியல் பக்கமே திரும்பல. அப்பா அரசியல்ல ஈடுபடச் சொன்னாங்க. எனக்கு இந்த அசிங்கமான ஆட்களோட நடக்கவே கேவலமா இருந்தது. அவங்க பேசுற மொழி, கலாச்சாரம் எதுவும் எனக்கு ஒத்துக்கல.

தீராநதி: தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவி, குழந்தைகள் என்ன செய்கிறார்கள்?

உதயக்குமார்: 1992ல் எனக்கும் மீராவுக்கும் திருமணம் நடந்தது. சென்னையில திருவேணி அகாதமி என்கிற நர்சரி ஸ்கூல்ல மனைவி வேலை பார்த்திட்டிருந்தாங்க. சென்னையில அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் நண்பர்கள். எத்தியோப்பியாவில் திருநெல்வேலியில் சேர்ந்தவர் என்னோட வேலை பார்த்தாரு. அவருடைய மகளும் எனது மனைவியும் நண்பர்கள். அந்தப் பொண்ணு என்கிட்ட சொல்வா. இந்த மாதிரி வெளிநாட்டுக்குப் போகணும்னு விருப்பமிருக்கு. இந்தியாவுல எதையாவது செய்யணும்னு விருப்பமிருக்குன்னு சொல்வாங்க. சந்திச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினோம். பிறகு அவாய்க்குக் கூட்டிட்டுப் போனேன். அங்க எம்எஸ்டபுள்யூ பண்ணினாங்க அவங்க எம்ஏ ஆங்கில இலக்கியம் தான். அங்கேயே சமூக சேவகியா வேலை பார்த்தாங்க கொஞ்ச நாளு. நான் யுனிவர்சிட்டி வேலை பார்க்கும்போது அவங்க சோஷியல் ஒர்க்கர் ஆக வேலை பார்த்தாங்க. இரண்டு பையன்கள் எங்களுக்கு சூர்யா, சத்யா. பெரியவன் எட்டாவது வகுப்பு படிக்கிறான். சின்னவர் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். காந்தியின் சத்தியாகிரகம் பாதிப்பில் சின்னவனுக்கு சத்யா என பெயரிட்டோம்.

குழந்தைங்க பிறந்த பிறகு எங்கள் இருவருக்குமே குழந்தைகளை அமெரிக்காவுல வளர்க்கக்கூடாது என்கிறதுல ரொம்ப தீவிரமாயிருந்தோம். ஊருக்கு வந்து ஏதாவது பண்ணணும் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருந்தது. சொந்த நாட்டிலிருந்து நிறைய பெற்றிருக்கிறோம். திருப்பிக் கொடுக்க வேண்டும். இருவருக்குமே பள்ளிக்கூடம் நடத்தணும்னு ஆர்வமிருந்தது. அங்க இருக்கும்போதே எங்களுடைய சேமிப்பில் நாகர்கோவில்ல காமராஜ் பாலிடெக்னிக் பக்கத்தில் பழவிளையில் நிலம் வாங்கிப் போட்டோம். அது முழுக்க எங்களுடைய உழைப்பு. நாங்க மிக எளிமையாக வாழப் பழகிக் கொண்டோம். ஓட்டல்ல போய் எல்லாம் சாப்பிடறதில்ல. 2001ல் பழவிளையில் எங்கள் இடத்தில் பள்ளிக்கூடம் கட்டினோம். நிறையப்பேர் சொன்னாங்க டவுனுக்குள்ள நிறைய கூட்டம் வரும் அப்படீன்னு நாங்க அமெரிக்காவ இங்க கொண்டு வர விரும்பவில்லை. ஏற்கனவே காலனியாதிக்கத்தின் கீழ் கஷ்டப்படுகிற ஒரு நாட்டுல திரும்பவும் மேலைநாட்டு மோகத்தை உருவாக்க விரும்பல. இன்னொன்று கிராமப் புறத்தில் உள்ள மக்களுக்குத்தான் எங்களுடைய கல்விமுறை அவசியம் என்ற நினைத்தோம். எங்களுடைய மாணவர்கள் எல்லாமே மீனவக் குடும்பத்திலிருந்தும் சாதாரண இந்து நாடார் குடும்பத்திலிருந்தும் வர்ற பிள்ளைங்க. எல்லாமே முதல் தலைமுறைக் குழந்தைகள். இவங்க பெற்றோர்கள் எல்லாமே முறை சார்ந்த கல்வி கற்றதில்லை. பெரும்பாலானவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

பொதுவாக. எல்லாரும் கிராமத்திலிருந்து டவுனுக்குத்தான் வரவிரும்புறாங்க. யாரும் டவுன்ல இருந்து கிராமத்துக்கு வர விரும்பவில்லை. எட்டாம் வகுப்பு வரைக்கும் இப்ப இருக்கு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகுப்பாக அதிகரிச்சிட்டு வாரோம். அரசு பாடத்திட்டத்தைத்தான் உபயோகப்படுத்துறோம். ஆனால் துணைப்பாடமாக சமாதானக் கல்வி, விவசாயம் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளைக் கொண்டே காய்கறிகள் வளர வைக்கிறோம். செயற்கை உரங்கள் போடாம பூச்சி மருந்து போடாம விவசாயம் உணவு பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்துறது முக்கியமான பணி. ஹிரோஷிமா தினம். காந்தி ஜெயந்தி எல்லாம் பெரிசா கொண்டாடுவோம். அப்ப உலக சமாதானம் பற்றிய விஷயங்களைச் சொல்லித் தருவோம். பிள்ளைகளுக்குள்ளே பிரச்னை ஏற்பட்டால் பெரிய குழந்தைகளை வைத்து விவாதித்து அவங்களை வைத்தே தீர்த்துக்கச் சொல்றது. ஆசிரியர்கள் தலையிடறதில்ல. அந்த மாதிரி சுற்றுச்சூழல் விஷயங்கள் பற்றி குழந்தைகளிடம் அதிகம் பேசுகிறோம். வகுப்பறைக்குள்ளேயே ரூமுக்குள்ள குழந்தைகளை அடைச்சுப் போடறதில்லை. பிள்ளைகள வெளிய கூட்டிட்டுப் போய் ஆசிரியர்களை பாடம் நடத்தச் சொல்றோம்.

ஆங்கிலப் பள்ளிதான். ஆனாலும் தமிழுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆங்கிலத்தில்தான் பேசணும்னு கட்டாயப் படுத்துறதில்லை. பெற்றோர் அப்படி விரும்புறாங்க குழந்தைகள் விஷயத்துல பெற்றோர்கள்தான் பிரச்சினையாக இருக்கிறார்கள்.

விலையுயர்ந்த ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து குழந்தைகளை எங்களிடம் ஆற்றுப்படுத்துதல் மற்றும் ஆலோசனைகளுக்காக கூட்டிட்டு வர்றாங்க. குழந்தைகளைப் பற்றி நிறைய புகார்களோடு அவர்கள் வருவாங்க வீட்டில் பெற்றோர்களிடம் கோபப்படுகிறார்கள். ஆசிரியர்கள் சொல்லுறதைக் கேட்கிறதில்லை இப்படி பொதுவாக குழந்தைகளின் இயல்பை ஒடுக்குவதைத்தான் கல்வின்னு நம்புற மனோபாவம் இருக்கு. ஆசிரியர்கள் படிபடின்னு கஷ்டப்படுத்துறதுக்கு பிள்ளைங்களால ஈடுகொடுக்க முடியல. படைப்பாற்றல் உள்ள தலைமைப் பண்பு கொண்ட குழந்தைகள் ஒடுக்கப்படுகிறார்கள். நிறைய புத்திசாலித்தனமான குழந்தைகங்களாக இருக்கும். ஆனா பள்ளிக்கூடம் அதுங்களுக்கு ஒத்துக்கல.

பிற பள்ளிகளுக்கு நானும் என் மனைவியும் சென்று குழந்தைகளுக்கு ஆலோசனை தருகிறோம். குழந்தைகளுக்கு ஆசிரியர்களோடு மட்டுமல்ல. பெற்றோர்களோடும் கம்யூனிகேஷன் இல்லை. மாறும் பருவப் பிரச்சினைகள் பத்தி குழந்தைகளுக்கு கற்றுத்தருகிறோம். குழந்தைகளோடு பேசுவதற்கு இன்று ஆட்கள் இல்லை. பருவப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை, பெற்றோர்கள் ஆசிரியர்களோடு சண்டை போடுறது. இப்படியெல்லாம் வருது. குழந்தைகளின் உணர்வு மாற்றங்களுக்கான வெளிப்பாடு இல்ல. இன்புட் நிறைய வருது. ஆனால் அவுட்புட் இல்ல. தொலைக்காட்சிகளில் அரைகுறையான பாலியல் செய்திகள் தொடர்ச்சியாக வந்துகிட்டேயிருக்கு. பல்வேறு முரண்படானா பாலியல் குறியீடுகள் குழந்தைகளுக்குப் போய்க்கிட்டே இருக்கு. நிறைய பள்ளிகளிலிருந்து இதற்காக கூப்பிடறாங்க. எங்கள் பள்ளியில் பாலியல் கல்வி பற்றிச் சொல்லித் தருகிறோம். கொஞ்சம் முற்போக்கான பள்ளிக்கூடங்களிலிருந்து இதற்காகவும் கூப்பிடுகிறார்கள். நாம செக்ஸ் பற்றி குழந்தைகளிடம் பேசமாட்டோம். ஆனால் குழந்தைகளுக்கு இன்புட் வந்துகிட்டிருக்கு. ஆம் பேசவும் முடியாது. ஆனா. கிடைச்சிட்டேயிருக்கு அப்ப நிறைய பிரச்னைகள் வருது.

சாக்கர் எங்களுடைய பள்ளிக்கூடம் சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் இடிகேசன் ரிசர்ச் என்பது சாக்கரை குறிப்பிடுவது. இதை உள்ளூர்ல உள்ள இந்து அமைப்புகள் எல்லாம் என்ன நினைச்சிட்டாங்கன்னா இதுவொரு கிறிஸ்டியன் பெயர். இவங்க இரண்டு பேரும் மதம் மாறிட்டாக். அமெரிக்க இவங்கள வச்சி இப்ப இங்க உள்ள ஆட்கள மதம் மாத்துறாங்க அப்படிங்கறமாதிரி பிரச்சாரம் பண்ணிவிட்டாங்க.

வழக்கமான பள்ளிக்கூடத்தில் எங்கள் இருவருக்கும் விருப்பம் இல்லை. அதனால தான் கம்யூனிட்டி சென்டர்ன்னு வைத்தோம். கலைஞர்கள். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கதை சொல்வதற்காக எங்க அப்பா. அம்மா வருவாங்க. நிபுணர்களைக் கூட்டிட்டு வந்து பிள்ளைகளோட உரையாடச் செய்வோம். கல்லூரிகளில் செமினார் இநத மாதிரி தான் கல்வி முறை எங்களிடம் பிள்ளைகளைக் கேள்வி கேட்க வைப்பது மணி அடித்து வகுப்பு நடத்தும் கல்விமுறை முட்டாள்களை உருவாக்கக் கூடியதாகும். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் இதுவரையில் நன்கொடையாக பத்து ரூபாய் கூட வாங்கியது கிடையாது. கட்டடத்துக்குத் தாங்க அதுக்குத் தாங்கன்னு வாங்கிதில்லை. கட்டடம் நிலம் எல்லாம் நானும் எனது மனைவியும் உழைத்து சம்பாதித்தவை.

வருடந்தோறும் யூரோப்புக்கு ரெண்டு மூணு தடவையாவது போயிருவேன். வகுப்புகள் நடத்துவதற்குப் போற இடங்கள்ல நல்ல காசு கொடுப்பாங்க. என்னுடைய ஒரு மணி நேர வகுப்புக்கு 125 யூரோஸ் கொடுப்பாங்க. அந்த அளவுக்கு சம்பாதிக்கிறேன். பணம் வருது. யாரிடமும் எதுவும் சுயமரியாதையை விட்டுக் கேட்பதில்லை. அது அப்பாவிடமிருந்தே வந்து தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். சிலர் சொல்வாங்க. அமெரிக்காவுல உங்களுக்குத் தொடர்பிருக்கு. நீங்க நினைச்சா நிறைய பணம் சம்பாதிக்கலாம். அப்படீன்னு. இந்தியா ஒரு ஏழைநாடு. இங்க வாழ்றவங்க பிச்சைக்காரங்கன்னு ஒரு இமேஜ் வெளிநாடுகள்ல இருக்கு அதனாலேயே எவர் கிட்டயும் உதவின்னு கேட்கறதில்ல. எங்களுடைய விழிப்புணர்ச்சியில் தெளிவாய் இருக்கிறோம். அமெரிக்கா போனதாலதான் சம்பாதிச்சு இந்தப் பள்ளிக்கூடத்தை உருவாக்க முடிந்தது. ஆனா எக்காரணம் கொண்டும் அமெரிக்கக் கருத்தியலையோ அமெரிக்கத் தன்மையையோ ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல. தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருப்பேன்.

தீராநதி: உங்களுக்கு அமெரிக்காவோடும் அமெரிக்க அரசாங்கத்தோடும உள்ள உறவு எத்தகையது?

உதயகுமார்: அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். நிறைய நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள் அங்கு படிக்கும்போதும் வேலை பார்க்கும் சமயங்களிலும் அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நான் இடதுசாரி சித்தாந்தம் உள்ளவன் என்பதால் அமெரிக்கவுக்கு எதிராக நிறைய எழுதியிருக்கிறேன். அமெரிக்க நியூஸ் பேப்பர்களிலும் எழுதியிருக்கிறேன். நிறைய பேசியிருக்கிறேன். அந்த சமூகத்தோடு நிறைய நெருங்கிய தொடர்பிருக்கு. நெருங்கிய நண்பர்கள் இருக்கிறாங்க. ஆனால் அமெரிக்க அரசாங்கத்தோடு நிறைய உராய்வுகள் வருது. என்னைப் பற்றி அமெரிக்க அரசாங்கம் தனி கோப்பு வைத்திருக்குது. ஒவ்வொரு தடவை அந்த நாட்டுக்குள்ள நுழையும்போதும் பெரிய விசாரணை நடத்தித்தான் உள்ள விடுவாங்க. அமெரிக்காவோட எனக்குள்ள தொடர்பு இதுதான். எனக்கு மற்றபடி அமெரிக்க அரசு நிறுவனங்களோடடோ அமெரிக்காவிலுள்ள தனிப்பட்ட ஃபவுண்டேஷனோடோ அல்லது அமெரிக்க அரசியல் குழுக்களோடவோ எந்தவிதத் தொடர்பு கிடையாது. அதில் ரொம்பத் தெளிவாயிருக்கிறேன். ஏன்ன நாம ஈடுபட்டிருக்கக்கூடிய விஷயம் அணுசக்தி. அ ணு உலைகள் பற்றியது. அமெரிக்காவில் இருக்கும்போதே இப்பணியை ஆரம்பிச்சிடேன். இதுபற்றிய செய்திகளை, தகவல்களை என்னிடமிருந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு அனுப்பி விடுவேன். கூடங்குளம் அணு உலைகள் வேண்டாம் என்பதை 1998ல இருந்தே சொல்லிட்டிருக்கேன். அங்கேயிருந்து ஜனவரி1 2001ல ஊருக்கு வந்தவுடன் லு டேவிட் இதையே இங்க செய்திட்டிருந்தார்.

தீராநதி: அணுசக்தி, அணு உலை பிரச்சினைகள் தொடர்பான தீவிர ஈடுபாடு எப்படி ஏற்பட்டது.

உதயகுமார்: அணுஉலை விஷயம் எனக்கு ரொம்ப முக்கியமாகப் பேசப்பட்டது. இது மக்களுக்கு எவ்வளவு பெரிய அழிவைத்தரும் என்பதை படிப்பின் வழியாகவும் அனுபவத்தின் வழியாகவும் உணர்ந்திருந்தேன்.

எனது தாத்தா பாட்டிகள்ல நாலு பேரு புற்றுநோயால் இறந்தவர்கள் என்னைய அதிகம் பாதித்தது அப்பம்மையின் மரணம். அவங்க பக்கத்துலதான் சிறிய வயதில் தூங்குவேன். வெத்தல போடுவாங்க. பாட்டி மண்டைக்காட்டுல பொறந்தாங்க. தாத்தாவுக்குத்தான் இசங்கன்விளை. எங்க ஊர்ல அவங்கள மண்டக்காட்டான்னு தான் சொல்வாங்க. பாட்டிக்கு புற்றுநோய் வந்தது. அப்பா அம்மாவுக்கு அதனை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கத் தெரியல. கொஞ்சம் முதிர்ச்சி அடைந்திருந்த நிலையில்தான் கண்டுபிடித்தோம். ஆரம்ப நிலையெனில் ஏதாவது செய்திருக்கலாம். நெய்யூர் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தோம். பலனளிக்கவில்லை. இப்போ ஆரம்ப நிலையெனில் ஒன்றுமே இல்லை. மருத்துவத்துறை மாறியிருக்கு. ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்த்துவிட்டால் பத்துப் பதினைந்து வருடங்கள் சந்தோஷமாயிருக்கலாம். அப்போது ஆரம்ப நிலைக்கே சரியான மருத்துவம் இருக்கவில்லை.

பாட்டியிடம் வெற்றிலை மணக்கும். பாட்டியோடு படுத்திருக்கும்போது பேன் குத்திக்கொண்டே ராமாயணம். மகாபாரதம், காசி. துரோப்பா. செம்புலிங்கம் கதைகள் எல்லாம் சொல்வாங்க. அவங்க ஒரு அழகான கதை சொல்லி கதைக்குள்ளே கிளைக்கதை. அதுக்குள்ள கிளைக்கதை என்று சென்று மீண்டும் மூலைக்கதைக்குள் வாறத என்று கதை சொல்வதற்கு விசேஷமான ஒருமுறை அவர்களிடம் தன்னிச்சையாக இருந்தது. என்னுடைய மேடைப்பேச்சு வெளிப்பாட்டுக்கு அவங்களுடைய இந்தக் கதை சொல்லல் முறை முக்கியமான காரணம். அம்மா, அப்பா இருவரும் வேலை நெருக்கடிகளில் இருந்ததால் அவங்களால குழந்தைகளுக்குச் செய்ய இயலாதவற்றை பாட்டி மூலம் அடைந்தோம். பாட்டி தான் தமிழ் உணர்வைத் தந்தது. பேச்சுத்திறனைத் தந்தது. உரையாடல் திறனை மேம்படுத்தியதும் பாட்டி தான். பேன் குத்திக்கேட்டே கதை சொல்வாங்க. தூங்கிப் போயிருவேன். பாட்டியோட மிக நெருக்கமாயிருந்தேன்.

புற்றுநோயால பாட்டி கன்னத்தில் ஓட்டை விழுந்து புழு ஏறி வீடெல்லாம் நாற்றம். அதன் பிறகு குழந்தைகளை பாட்டி பக்கத்துல விடமாட்டாங்க. எந்த வாய் எங்களுக்குத் கதை சொல்லி ஆளாக்கியதோ அந்த வாய்க்குப் பக்கத்தில் சென்று முத்தம் கூட தரமுடியவில்லை. இது சிறு வயதில் மிகவும் பாதித்தது. துடிதுடித்து இறந்தாங்க. கூடங்குளம் விஷயத்தில் நான் ஈடுபட்டதற்குக் காரணம் இதுதான். இதுவொரு சுயநலம்தான். இந்த வேதனையும் துன்பமும் அணுவுலைகளால பிறருக்கு ஏற்படக்கூடாது என்கிற வைராக்கியம். புற்றுநோய் உள்ளவங்களப் பார்த்தாலே என்னால் தாங்க முடியாது. நேற்று இரவு மணப்பாடுன்னு ஒரு ஊருக்குப் போயிருந்தோம். ஊர்த்தலைவர் மனைவிக்குப் புற்றுநோய். திருவனந்தபுரம் போயிருந்தோம். சோதனை செய்து பார்த்திட்டு திருப்பி அனுப்பிட்டாங்க என்று சொன்னார். புற்றுநோய்ன்னாலே எனக்கு பயம். பாட்டி மட்டுமல்ல. என் பிள்ளைங்க இந்த நோயால எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடாது. எனது மனதுக்கு இதமானவர்கள் அவஸ்தைப்பட்டு புற்றுநோயால இறந்ததை நெருங்கியிருந்து பார்த்தவன் நான் எனது சொந்த ஊரான இசங்கன்விளையில் தீவிரமா புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் இருபத்தைந்துக்கு அதிகமிருக்காங்க. எங்கள் வீட்டுக்கு நேர்எதிர் வீட்டில் கர்ப்பப்பை புற்றுநோயால அவதிப்படும் நோயாளியிருக்கிறாங்க.

மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு இந்தப்பக்கம் உள்ளது சின்னவிளை. அந்தப்பக்கம் பெரியவிளை, மண்டைக்காடுபுதூர், கொட்டில்பாடு என்று கடற்கரை கிராமங்கள் நாடார் கிராமங்கள், மண்டைக்காடு, பருத்திவிளை என்று அனைத்து ஊர்களிலும் புற்றுநோய் அதிகம். அந்தப் பகுதிகள்ல நாங்க ஆய்வு பண்ணியிருக்கிறோம். டாக்டர் லால்மோகனும் வந்திருக்காரு. கூட்டம் நடத்தியிருக்கிறோம். இந்த ஊர்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் பத்துத் தடவையாவது போயிருப்பேன். நான் ஒவ்வொரு ஊர்கள்ல உள்ள பெண்கள் குழுக்களுடனும் பேசியிருக்கிறேன். தொற்றுநோய் மாதிரி இப்பகுதிகளில் புற்றுநோய் பரவியிருக்கு.

என்னன்னா இப்பகுதி கடற்கரை மண்லதோரிடம் கிடைக்குது. மோனோசைட்டின் ஒரு கூட்டுதான் தோரியம். இது அதிகமான கதிரியக்கத்தன்மை கொண்டது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமிருக்கு. மழைபெய்யும்போது ஆறுகள் மூலமாக அடித்து வரப்பட்டு கடற்கரைகள் நோக்கி கொண்டுவரப்படுது இது. வள்ளியாறு தாமிரபரணியாறு மூலம் எல்லா இடமும் விரியுது. இதனை இந்த மணவாளக்குறிச்சி மணல் ஆலை தோண்டியெடுக்கும்போது மேலும் இயற்கை கதிரியக்கம் அதிகமாகுது. அதனை இயற்கையாகவே அப்படியே விட்டோம்னா ஒண்ணுமில்லை. அப்படியே படிஞ்சி படிஞ்சி இருக்கும். அப்பகுதி கடற்கரை மக்களுக்கு புற்றுநோய்க்குக் காரணம் இதுதான். அப்படியே மணல் மேல இருக்கிறாங்க. டாக்டர் லால்மோகன் இங்க செய்த ஆய்வில் ஆண்களுக்கு விரைகளில் புற்றுநோய் அதிகமிருக்கு மணல்கள்ல இருந்துதான் வலை பின்னுறதில் இருந்து சீட்டாடுவது வரையில் பழக்கமாயிருக்கு. ஏற்கனவே இப்பகுதிகள்ல நாற்பது சதவிகிதம் இயற்கையாகவே கதிரியக்கம் இருக்கு. அந்த கம்பெனி ஆலை மணல் பிராசசிங் பின்னர் அதிகமாகுது. தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி திருவனந்தபுரம் கொல்லம் ஆலப்புழை இப்படி ஆறு கடலோர மாவட்டங்களில் இயற்கையான கதிரியக்கமே நாற்பது சதம் அதிகம். வி.டி. பத்மநாபன், டாக்டர் லால்மோகன் போன்றோரின் ஆய்வுகள்ல. இது தெளிவாயிருக்கு. அரசு மணல் ஆலைகளும் தனியார் மணல் ஆலைகளும் இந்த தோரியத்தைக் கிளறிவிடும்போது மேலும் கதிரியக்கம் அதிகமாகுது.

தோரியம் கலந்த மணல் உலகத்திலேயே மூன்று நாடுகளில்தான் அதிகமிருக்கு. நார்வே. துருக்கி, இந்தியா. நம்ம நாடு தோரியம் உள்பொருள் அதிகம் உள்ள மணல் நாடு. இந்த மணல் ஜெர்மனுக்கும் ஜப்பானுக்கும் போகுது.

தீராநதி: கூடங்குளம் அணுவுலைகள் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன?

உதயகுமார்: என் மீது மட்டும் அரசாங்கம் தேசத் துரோக வழக்கு. அது இதுன்னு எண்பத்தைந்து வழக்குகளுக்கு மேல் பதிவு செய்திருக்காங்க. என்னைக் கைது செய்தாலும் கூட போராட்டம் தடைபடாத அளவுக்கு அடுத்தகட்ட தலைவர்களை நியமித்திருக்கிறோம். எனக்கு விலைபேசி நீங்க குடும்பத்தோடு அமெரிக்காவுல செட்டிலாகிடுங்கன்னு சொன்னாங்க. விபச்சாரம் செய்வதற்காக நான் இந்தியாவிற்குத் திரும்பி வரவில்லை என்று பதில் கூறினேன். என்னையும் என் குடும்பத்தினரையும் கடத்தி வச்சிட்டு உதயகுமார் பணம் வாங்கிட்டு தலைமறைவாகி விட்டார் என்று பிரச்சாரம் செய்து போராட்டக்குழுவுக்குள் பிளவை ஏற்படுத்தும் எண்ணம் இருந்தது பலிக்கவில்லை. இப்ப அமெரிக்காவுல இருந்து எங்களுக்குப் பணம் வருதுன்னு கிளப்பி விடுறாங்க. அரசாங்கம் இந்த மக்கள் போராட்டத்திற்கு எதிராக கூடுமானவரையில் எதையெல்லாம் செய்யமுடியுமோ, எல்லாவற்றையும் செய்யுது. அணுசக்தித் துறை அணு உலை ஆதரவு பிரச்சாரத்திற்காக மட்டும் உளவுத்துறை மூலமாக ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாங்கள் மக்களின் கடன் தொழிலிலிருந்தும் பீடி சுத்தும் தொழிலிலிருந்தும் கிடைக்கிற பணத்தில் இப்போராட்டத்தை நடத்துகிறோம் என்பதே உண்மை.

பால பிரஜாபதி அடிகளாரை ஓய்டேவிட்டும் நானும் முன்னோடியே போய்ப் பார்த்திருக்கிறோம். 2001 காலகட்டத்திலேயே கூட்டங்கள் நடக்கும்போது வருவாரு. நல்லா பேசுவாரு. அருமையான சொற்பொழிவாளர். கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிச்சதும் போய் பார்த்தோம். பார்த்துப் பேசி இடிந்தகரைக்கு வந்தாரு கூடங்குளத்துக்கு வந்தாரு இடிந்தகரைக்கு நான்குமுறை வந்திருக்காரு.

தொடர்ச்சியாக சென்னைக்கு எல்லோரும் போயிருந்தோம். இவரும் வந்திருக்காரு. தமிழக முதல்வர் சந்திப்பில் இவரும் இருந்தாரு. ஜெயலலிதாவிடம் பேசும்போது கூடங்குளம் அணுவுலைகள்ல தீவிரவாதத் தாக்குதல் ஏற்பட வாய்ப்பிருக்குன்னாரு. அவங்க இத்தகைய பேச்சை விரும்பவில்லை. ஏன் என்ன நடக்கும் நாங்களும் கடலோரத்துக்குப் பக்கத்தில தானே இருக்கோம். அப்படின்னாங்க. இவர் பேசியது பிடிக்கல. பின்பு விடைபெற்றுத் திரும்பும்போது எனது கையை பிடித்து முத்தம் கொடுத்தார். நம்ம சமுதாயத்தில் இப்படியொரு திறமையான ஆள் இருந்தது எனக்கு தெரியாமப் போச்சே. அப்படீன்னாரு. நான் உண்மையாக இப்ப ஒரு திருத்தலத்திலிருந்து சொல்றேன். இவர் முத்தம் தந்தவுடன் எனக்கு ஐயய்யோன்னு தோணிச்சி. எனக்கு ரொம்பவும் புகழ்றவங்க. கால்ல விழறவங்களைக் கண்டா பயம் வரும். பயந்தது அப்படியே நடந்தது.

இடிந்தகரை மக்களும் அவரை ரொம்ப அன்பாக பார்த்தாங்க. எல்லாமே நல்லா இருந்தது. ஒரு கூட்டம் முடிந்ததும் சொன்னாரு. அணுவுலைக்கு எதிரான அடுத்த கூட்டத்தை சுவாமித்தோப்பில் நடத்துவோம்ன்னு. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் போராட்டம் கடலோரம் கடலோரம்னு நடந்திட்டிருக்கு. அதற்கு வெளியில் நடப்பது போராட்டத்துக்கு மற்றொரு பரிமாணத்தையும் தரு. இது எல்லா மக்களுக்கும் உரிய பிரச்னைதானே என்று நினைத்தோம். நாடார் ஊர்ல முன்னணித் தலைவர் ஒருவர் நடத்துறேன்றான்னு மகிழ்ச்சியடைந்தோம்.

அன்று சாயுங்காலம் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாரு. அனுமதி கிடைக்காது போலிருக்குன்னு. ஐயா அதப்பத்திக் கவலைப்படாதீங்க நாங்க அனுமதி வாங்கியிருக்கிறோம். நாங்கள் வாங்கி தருகிறோம் என்று சொன்னேன். நாங்கள் அனுமதி பெற்ற பின் அவரைத் தொடர்பு கொண்டவுடன் அதுல சிக்கல் இருக்கு பார்த்துக்கிடுங்க அப்படின்னாரு நாங்க என்ன நினைச்சோம் பந்தல் எல்லாம் போட வேண்டி வரும். செலவு ஆகும். அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கிறாரு போல இருக்குன்னுட்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கொண்டாடி போராட்டத்தை இடிந்தகரையிலேயே வச்சிருவோம்னு சொன்னேன். மென்முறை பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்துவோம். அகிம்சைங்கற வார்த்தை வேண்டாம். அதற்குப் பதிலான மென்முறைங்கற தமிழ்வார்த்தையே பயன்படுத்துவோம். இதுல ஐயா வழியில் மென்முறை அப்படி பேசுங்கன்னோம். வந்திருந்தாரு. அன்னைக்கும் அருமையான ஒரு பேச்சு. அற்புதமாகப் பேசினார். ஐயா வழியில் உள்ள மென்முறை பற்றி படிக்கணும். எழுதணும்ங்கறது என்னுடைய நெடுநாளைய ஆசை. அருமையாகப் பேசினாரு. மக்களுக்கும் நல்ல திருப்தியாக இருந்தது.

அப்புறம் ரெண்டு மூன்று நாட்கள் கழித்து இரவு 9 மணியிருக்கும் தொலைபேசியில் அழைத்தார். முதல் கட்ட உண்ணாவிரதத்தை முடிச்சிட்டு இரண்டாங்கட்ட போராட்டத்தைத் தொடங்குகறதுக்கு முன்னாடி வீட்டிலிருந்தேன். பிரதமர பார்க்கப் போற காலகட்டம். உங்கள வந்து பார்க்கணும்னாரு வாங்கன்னேன். வந்தாரு. நீங்கள் தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளை ஏதும் வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. ஆமா வச்சிருக்கேன். எங்கள் பள்ளிக்கூடத்தை நடத்துறதுக்கு ஒரு அறக்கட்டளைதான் வேணும்னுட்டாங்க அதில நானும் எனது மனைவியும் தான் உறுப்பினர். வேறெதும் கிடையாது அப்படீன்னு சொன்னேன்.

சுனாமி வேலை ஏதும் செய்தீங்களான்னு கேட்டாரு. இல்ல தொண்டு நிறுவனங்கள் மூலம் பணம் வாங்கி செய்யலான்னாங்க. ஐயா என்ன விடுங்க. தொண்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகள விட கேவலப்பட்டுக் கெடக்கு நான் வரலன்னு விட்டுட்டேன் என்று சொன்னேன். கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான போராட்டக் குழுவை உறுதிப்படுத்த வேண்டாமான்னு கேட்டாரு. யார் யாரெல்லாம் அதில இருக்காங்கன்னு கேட்டாரு அதிலிருக்கும் பத்துப் பேரோட பெயர் சொன்னேன். கூடங்குளத்திலிருந்து இரண்ட பேர் நான் உட்பட இந்து நாடார்களே நான்கு பேர் வந்திருக்கிறோம். கத்தோலிக்க ஃபாதர்கள் சிலபேர் இருக்காங்க. அப்படீன்னேன். ஆலோசனைக் குழுவுல ஐயா நீங்க, தூத்துக்குடி பிஷப், பாளையங்கோட்டை பிஷப் டேவிட், மதுரையிலிருந்து குருசாமி வழக்கறிஞர் இவ்வளவு பேரும் இருக்கிறோம்ன்னேன். போயிட்டு வாரன்யா எல்லா நல்லபடியா நடக்கட்டுன்னு சொல்லிட்டுப் போனாரு.

இரண்டு நாள் கழிச்சி போராட்டத்துக்கு எதிரா அவருடைய சன் டிவி பேட்டி வந்தவுடன் நான் அழைத்தேன். போன் எடுக்கல. டாக்டர் லால்மோகனை கூப்பிட்டுக் கேட்டேன். அவரும் சொன்னாரு. நானும் பேட்டி பார்த்தேன். அதிர்ச்சியா இருந்தது. கேட்டதுக்கு நான் சொல்லாத டிவியில போட்டுட்டாங்கன்னு சொன்னாரு என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிஷப் கூப்பிட்டுச் சொன்னாரு உதயகுமார் கவனமாயிரு நம்முடைய போராட்டத்தை சாதி ரீதியாக பிரிப்பதற்கான வேலைகள் நடக்குது. ஐம்பது லட்ச ரூபாய் இதற்குக் கைமாறியுள்ளதா எனக்குத் தகவல் வருது. உளவுத்துறையில் இருந்து கவனமாயிருக்கச் சொன்னாரு. இதை யார் செய்வாங்கற்கது குழப்பமாக இருந்தது.

இப்ப கடைசியா நான் அணுவுலைக்குள்ள போய்ப் பார்த்தேன். ரொம்ப பாதுகாப்பா இருக்குன்னு வந்து அறிக்கை விடுகிறார். இதுபோலத்தான் சரத்குமாரும் டெல்லியில் என்னை பெருமிதப்படுத்தினார். இப்ப தலைகீழாயிட்டார்.

தீராநதி : கூடங்குளம் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தியதில் உங்கள் பங்கென்ன?

உதயகுமார் : 2001ல இருந்து இதுவரைக்கும் அணுசக்தி பற்றி தொடர்ச்சியாக எழுதுவது பேசுவது என்று செயல்படுகிறேன். அணு இயற்பியல், பொருளாதாரம் அணு அரசாங்கம், அணு வியாபாரம் அரசியல் உலகளாவிய அணுசக்தி ஒப்பந்தங்கள் என்று பார்த்துப் போகும்போது இது எவ்வளவு சிக்கலான குழப்பம் நிறைந்த பொருள். இது மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல் படித்த மக்களுக்கே புரியாத ஒரு விஷயத்தை தனிப்பட்ட நலனுக்காக உபயோகிக்கிறாங்க. உருவாக்குறாங்கன்னு தெரிஞ்ச பிறகு எனக்கு உந்துதல் வந்து இதுபற்றிப் பேசுகிறேன். 2001 லிருந்து தொடர்ச்சியாக இதற்காக செயல்பட்டது தவிர எங்களுக்கு லாபமும் கிடையாது. பின்னணியும் கிடையாது. உண்மையாகவே சொல்லப்போனால் இதையொரு போராட்டமாக மாத்தணும்னு திட்டமும் கிடையாது.

2007ல் மாற்றம் வந்தது. அதுவரைக்கும் கூடங்குளம் பகுதி மக்களை இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்து வைத்திருந்தார்கள். பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பேச்சிப்பாறை தண்ணி வரும் உங்க ஊரு செழிப்பாகும். வெளியூர்ல இருந்து ஆட்கள் வருவாங்க. லாட்ஜ் கட்டி வாடகைக்கு விடலம். இப்படி இந்த ஊரு பெரிய வளர்ச்சியடைந்த ஊராகும். பணம் சம்பாதிச்சிரலாம் என்கிற நம்பிக்கையை மக்கள்கிட்ட ஏற்படத்தியிருந்தாங்க.

கூடங்குளம் ஊருக்குள்ள நாங்கள் பேசப்போனா அடிக்க வருவாங்க. பெரிய கூட்டங்கூடிரும். பயந்து ஓடியிருக்கோம். அந்த ஊருக்குள்ளேயே போக முடியல. எல்லாம் கடலோர ஊர்கள்ல மட்டும்தான் அப்ப வேலை செய்ய முடிந்தது. ஏற்கனவே கடலோரத்தில் வாழ்ந்த மக்கள் விழிப்புணர்வோட இருந்தாங்க. அணுக்கதிர்வீச்சுன்னா என்ன. கசிவுன்னா என்ன. விபத்துன்னா என்ன என்பது பற்றியெல்லாம் நாங்களும் அவர்களிடம் பேசியிருக்கிறோம்.

2007 வரையில் ஒரு மாற்றமும் நடக்கல. கூடங்குளத்தில ஒரு வளர்ச்சியும் நடக்கல பத்தாயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கல. இச்சந்தர்ப்பத்தில அணுசக்தித் துறை விளம்பரத்தில் ஒரு வார்த்தை போட்டியிருந்தான். அதுதான் இவனுக்கு ஓஹோ தலையில கைய வைக்கிறான். ஊரவிட்டுப் போச்சொல்றேன். போட்டுட்டுப் போகவேண்டி வரும் போலருக்கேன்னு தோணிச்சு ஊர்ல மணியெல்லாம் அடிச்சி ஊரைக் கூட்டி மக்கள் இதுபற்றிப் பேசினாங்க. அப்ப நான் கென்யா நைரோபியில் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். போயிட்டு வந்தவுடன் சுப்பிரமணியன்னு ஒருவர் கூடங்குளம் ஊரைச் சேர்ந்தவர். எங்க ஊருக்குள்ள மாற்றம் உருவாயிற்று நீங்க வாங்கன்னு கூப்பிட்டார். அதன் பிறகு தான் கூடங்குளம் ஊருக்குள்ள வந்தோம். அதுவரைக்கும் ஊருக்குள்ள வரமாட்டோம்.

நீங்க சொன்னதையெல்லாம் அப்ப கேட்கல இப்ப புரியதுன்னாங்க. அது வரையில் இப்பிரச்சினை நாடார். பரவர் பிரச்சினையாக இருந்தது. நாடார்கள் எல்லாம் அதுவரைக்கும் எப்படி பாத்தாங்கன்னா இது அவனுக்கு பிரச்சினை நம்மள ஒண்ணும் செய்யாது இப்படி. இப்பதான் முதல்முறையா தெரியுது. இது அவனுக்கு பிரச்சினை நம்மள ஒண்ணும் செய்யாது இப்படி இப்பதான் முதல் முறையா தெரியுது. இது அவனுக்கு மட்டுமில்ல நமக்கும் பிரச்சினை அணுக்கசிவுக் கதிர்வீச்சு ஏற்பட்டா என்னாகும்? மீன் உணவு என்னாகும்? சாப்பாட்டுக்கு பிரச்சினை. அதன் பிறகு ஊர்களுக்குள்ளேயும் போய் பேச ஆரம்பித்தோம். கூடங்குளம் செட்டிகுளம் மற்றுமுள்ள நாடார் ஊர்களுக்குள்ளேயும் போவோம். துண்டு பிரசுரங்கள் கொடுப்போம்.

எங்களுக்கு எந்தவித நிதியுதவியும் கிடையாது. எந்த அறக்கட்டளைகளிடமிருந்தும் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் காசு வாங்கல. சில தனிப்பட்ட நபர்கள் உதவியிருக்காங்க. நாங்கள் எங்கள் சொந்தப் பணத்தில் தான் வருவோம்.

2011ல ஜப்பான்ல ஃபுகுஷிமா நடந்தது நல்ல திருப்புமுனை. அதன் பிறகு மக்களுக்கு. இவனுக சும்மா சொல்லல. இவனுக சொன்னதெல்லாம் நடக்குதுன்னு எண்ணம் உறுதிப்பட்டது. அணுவுலை வெடிக்கும். வெடிச்சா சுற்றுவட்டார 30 கிலோமீட்டருக்கு இடத்திலிருந்து அப்புறப்படுத்துவாங்க ஊரைவிட்டுப் போகணும் அகதியா வாழணும். இந்தப் பயலுக சொன்னதெல்லாம் நடக்குது என்று வந்தது. அது எங்களுடைய மதிப்பை படுபயங்கரமாக மக்களிடம் அதிகப்படுத்தியது.

1988ல ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வர்றதாயிருந்தது. இன்று 2011 கிட்டத்தட்ட 23 வருடமாச்சி. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் ஆகுது. இவ்வளவு நாளில்லாமல் அணுசக்தித் துறை சொல்றான் கூடங்குளம் இயங்கப்போகுதுன்னு. அட அறிவு கெட்டவனுங்களா கொஞ்சமாவது புத்தி இருந்தா ஃபுகுஷிமா? ஃபுகுஷிமா விபத்தை நீங்க கொடுத்த டிவி வழியாகவே ஒவ்வொருவரும் பார்த்துவிட்டு சமயம் நானாக இருந்திருந்தால் சும்மா இருங்கடே பிறகு பாத்துக்கிடலான்னு சொல்லியிருப்பேன். 23 வருஷமா கிடந்தது. சவம் இன்னும் ஒரு வருஷம் கிடக்கட்டும் என்றிருப்பேன். ஆனால் இவன் இந்த சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கிறேன் என்றான்.

இரண்டாவது ஜூன்ல 1ம் தேதி பரிச்சாத்த ஓட்டம் ஃபுகுஷிமா நடந்து மூணுமாசத்துக்குள்ள இவனுகளுக்கு அறிவைப் பாருங்க. இவனுங்கெல்லாம் விஞ்ஞானி ஜூலை ஒண்ணாந் தேதி மாதா கோவில் முன்னால உண்ணாவிரதம் வச்சோம். எங்களுக்கு இந்த தேதின்னு தெரியாது. எங்களுக்கு இவங்க எந்தவித அறிவிப்பும் கொடுக்கல. தற்செயலான உண்ணாவிரதம் அது.

அடுத்த நாளையில இருந்து கடபுட கடபுடன்னு அணு உலையில் இருந்து பலத்த சத்தம் புகை போக்கியில இருந்து கட்டுக்கடங்காத ஆவி இதையெல்லாம் கடலோர மக்கள் எல்லோரும் பாத்தாங்க. அப்பதான் இத இப்படியே விட்டா சரிப்படாதுன்னு மக்களுக்கு எண்ணம் உறுதிப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் கூடங்குளத்தில் திரண்டாங்க. அணுவுலையிலிருந்து எழும் சத்தம் எப்படியிருக்கும்னா குட்டுவத்தில் தண்ணிய சுழல விட்டு வர்ற சத்தத்த பத்தாயிரம் மடங்கு பெருக்குனீங்கன்னா வர்ற சத்தத்தை ஒத்தது அது உலகம் இடிஞ்சி தலையில விழுற மாதிரி சத்தம் கடுமையான சத்தம்.

கூடங்குளத்தில் இருந்து கூப்பிட்டாங்க. அப்பதான் ஃபுகுஷிமாவுக்கு நான் 15 நாட்கள் போயிட்டு வந்திருந்தேன். போயிட்டு வந்த அடுத்த நாளு ஆகஸ்ட் 11 என்ன நடக்குதுன்னு பார்த்திட்டு வருவோம்னு வந்தா. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருக்காங்க. இந்த அணுவுலைகள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள்னு மக்கள் சொல்றாங்க. அங்க நாங்க மக்களோட பேசிட்டிருக்கும்போதே செய்தி வருது. இடிந்த கரையில் கோயில் மணியடிச்சி ஊரக்கூட்டுறாங்க. உடனடியாக வாங்கன்னு. உடனே இடிந்தகரைக்கு வந்தோம். ஃபாதர் பங்களா முன்னாடி ஏகப்பட்ட கூட்டம் இடிந்தகரையில் கிட்டத்தட்ட பாதி ஊர் நிக்குது.

அப்பத்தான் உடனடியாக ஆகஸ்ட் 18ம் தேதி உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்வோம்னு தீர்மானித்தோம். வேறு எந்தவிதமாகவும் மக்களைத் திரட்டவில்லை. ஆகஸ்ட் 16ந் தேதி இருபதினாயிரம் மக்கள் கடலோரப் பகுதி மக்கள் அருகில் உள்ள நாடார் கிராமங்கள்ல இருந்து என்று மக்கள் வந்து திரண்டாங்க. அந்த சூழ்நிலையிலும் செட்டிக்குளத்துக்காரன் வரல. அந்த ஊர் தலைமையில் இருந்தவர்கள் அணுவுலை ஆதரவுக் கொள்கை சார்ந்தவர்கள். இப்படி முதல்நிலை உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

நேர்காணல் சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.

தொகுப்பு: ரோகிணி
படங்கள்: விஸ்வகர்மன்

நன்றி: தீராநதி

No comments: