Kadhai Alla Nijam

Tuesday, May 12, 2009

அக்குழந்தையும் சிறிது நேரத்தில் இறக்கப்போகிறது.......

கடந்த ஞாயிற்றூக்கிழமை, சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட் இரத்தக்குளிப்பு, என கடுமையாக கண்டித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
இது தொடர்பாக ஐ.நா வினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கடந்த சனிக்கிழமை தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் பாதுகாப்பு வலயத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியின் மீது சிறிலங்கா படையினர் நடாத்திய கொடூரமான வான் மற்றும் வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும், ஐ.நா சபை மார்ச் மாதத்தில் வெளியிட்ட உள்ளக ஆவணம் ஒன்றில், பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐ.நாவின் இந்த கண்டன அறிக்கை சர்வதேச ஊடகங்களின் சிறிலங்கா பற்றிய செய்திகளில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன. உதாரணமாக நேற்றை தினம் பிபிசியில் வந்த செய்திக்கண்ணோட்டத்தில்: பாதுகாப்பு வலயத்தில் மோதல் நடைபெறும் பகுதியில் பணியாற்றும் மருத்துவர்கள், தொண்டூழியர்களின் தரவுகளின் படி 378 பேர் படுகொலை செய்யப்பட்டும், 1200 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, தமிழீழ விடுதலை புலிகள் தரப்பில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளே பொது மக்களை கொல்வதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு முக்கிய பிரதேசமான கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியினையும் சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அரச ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளஸ்ட்டர் குண்டுகள், பல்குழல் எறிகணை வீச்சுக்கள், சகிதம் சிறிலங்கா இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல்களில் கடந்த இரு நாட்களுக்குள் கொல்லப்பட்ட 1200 பேரின் உடலங்கள் தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும்,தமிழ் மக்களிற்கு சார்பான, இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 165,000 ற்கு மேற்பட்ட இடம்பெயர் மக்கள் வவுனியா மாவட்டத்திற்குள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அங்கிருந்து மீள் குடியேற்றம் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையும், மனிதாபிமான அமைப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது என பிபிசி செய்திக் கண்ணோட்டம் சால்கிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் சிறிலங்கா தடுப்பு முகாம்களிற்குள், இடம்பெயர்ந்த மக்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், சித்திரவதைகள் என்பவற்றை உறுதிப்படுத்தும் காட்சிகளை தொகுத்தளித்த, பிரித்தானிய ஊடகவியாளலர்களினை சிறிலங்கா அரசு நாடுகடத்தியுள்ளது. அவர்களில், Channel 4 இன் ஆசிய பிராந்தியத்திற்கான பொறுப்பாளர் நிக் பெட்சன் வால்ஸ், சிறிலங்காவில் இருந்து வெளியேறிய சில மணி நேரத்தின் பின்னர் தாய்லாந்தில் இருந்து அளித்த செவ்வியில், தொடர்ந்து, அங்கு மக்கள் உயிரிழக்க நேரிடுவதாகவும் உடலங்கள் அப்புறப்படுத்தபடாமல் கிடப்பதாகவும், உணவு நீர் பற்றாக்குறை நிகழ்வதாகும், பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டி வருகின்றன எனத் தெரிவிக்கின்றார்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடாத்திய எறிகணை மற்றும் ஷெல் தாக்குதல்களில் 3200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் களநிலை அதிகாரி லாரன்ஸ் கிறிஸ்ட்டி தெரிவித்துள்ளதுடன், வைத்தியசாலை வட்டாரங்கள் 378 உடலங்கள் கிடைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளன.தினந்தோறூம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமான படுகொலை செய்யப்படுகின்றனர், என்பதை ஆதாரத்துடன் சர்வதேசத்திற்கு முன்வைத்த போது, நம்ப மறுத்த சர்வதேச ஊடகங்களும், சர்வதேச அமைப்புக்களும் தற்போது கண்டனம் தெரிவிக்கும் வரை செய்திகள் மாற்றப்பட்டிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
குறுகிய மூன்று கிலோ மீற்றர் பகுதிக்குள் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை சிறைப்பிடித்து, அவர்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது, உயிரிழப்புக்கள் அதிகமாகவே ஏற்படும் என கருதி அதற்கான ஒத்திகையை கடந்த சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்துவிட்டது.ஆயினும் தாக்குதல் நடாத்தப்படும் பிரதேசத்தில், உயிராபத்தின் மத்தியிலும், கண் முன் நிகழ்வதை அப்படியே படம்பிடித்து வெளிஉலகத்துக்கு தந்துகொண்டிருக்கும் அர்ப்பணிப்பாளர்களின் ஊடக சேவையினால் குழம்பி போயிருக்கும் சிறிலங்கா இராணுவம் தாம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என அடித்துக்கூறுவதை இனிமேலும் சர்வதேசம் நம்பும் வாய்ப்பு நழுவுகிறது என்பதை உணர்ந்துள்ளது. இறுதியாக மேற்கொண்ட படுகொலைகளையும், இனி நடாத்தப்போகும் படுகொலைகளுக்கும் காரணம் நாங்கள் அல்ல, விடுதலை புலிகளே என தெரிவிக்க தொடங்கியுள்ளது.தாக்குதல் நடாத்தியவர்கள் தாங்கள் தான் என்பதை மறுத்தாலும், நடாத்தப்பட்டது உண்மையே என ஊடகங்களிடம் ஒத்துக்கொள்ளும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐ.நாவினால் சிறிலங்கா அரசை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கையும், இன்றைய தேதிகளில் உலகில் வேறந்த பரபரப்பான நிகழ்வுகள் இடம்பெறாமையும், இவ் இனப்படுகொலைகள் தமிழர்கள் இல்லாத நாட்டிலும் தலைப்புசெய்திகளில் வருமளவுக்கு முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன.. மீண்டும் இத்தாலியில் ஒரு நிலநடுக்கம், பாப்பரசரின் விஜயம், தலிபான்கள் தாக்குதல் என எங்காவது நிகழ்வுகள் தோன்றத்தொடங்குமாயின் தமிழ் மக்களின் படுகொலைகளை, கண்டுகொள்ளாத நிலைக்கு இவ் ஊடகங்கள் சென்றுவிடக்கூடும், அல்லது,சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு மறைக்கப்படக்கூடும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் ஒன்றினைந்த கவனயீர்ப்பு போராட்டங்கள்,உண்ணாநிலை போராட்டங்கள்,கருத்துப்பகிர்வுகள்,விவாதங்கள், பின்னூட்டங்கள், இன்னும் பல முயற்சிகளாலேயே, சர்வதேச ஊடகங்களில் , தமிழ் மக்கள், தங்கள் முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனை தான் இப்போது செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் பாதுகாப்பு வலயத்தில் மக்களுக்கு தொடரும் இனக்கொடூரம் முடிந்த பாடில்லை...
நாடுகடத்தப்பட்ட நிக் பட்டன் தனது பதிவில், குறிப்பிட்ட ஒரு இடைத்தங்கல் முகாமின் குளியல் பகுதியில் மூன்று இளம்பெண்களின் உடலங்கள் கிடந்ததாக தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க வந்த வெளிநாட்டு மருத்துவ குழுவொன்று, சின்னஞ்சிறார்களினதும், பெண்களினதும் உரோமங்களில் பதிந்துள்ள சன்னங்களினையும், எரிகாயங்களையும் பார்த்து விட்டு, 'தங்களை தங்களது தாயக பூமியில் இருந்து இடம்பெயர வைப்பதற்கு, அவர்கள் கொடுத்துள்ள விலை' என்ன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என தெரிவித்தது.

இடம்பெயர்ந்து வந்துள்ள, பெற்றோரை இழந்த 18 வயதுக்கு கீழ்ப்பட்ட 6 சிறார்களை, அவர்களின் உறவினர்களிடம் கையளிக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறுத்து இடைத்தங்கல் முகாம்களிலேயே அவர்களையும் வைத்திருக்க சிறிலங்கா இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்தின் எஞ்சிய பகுதிகளில் இறந்த பெற்றோரின் சடலங்கள் நடுவே, தான் மட்டும் உயிருடன் இருப்பதை உணராமல் மரத்துப்போயிருக்கும் குழந்தையை தனியாக பிரித்தெடுத்து காப்பாற்ற யாருமில்லாமல், அக்குழந்தையும் சிறிது நேரத்தில் இறக்கப்போகிறது.......

1 comment:

சவுக்கடி said...

ஐ.நா.வும் சரி, பிற நாடுகளும் சரி 'எச்சரிக்கிறோம்' 'கண்டிக்கிறோம்' என்கின்றனவே தவிர உருப்படியான காப்பு நடவடிக்கைகள் எவராலும் எடுக்கப் படாத இரங்கத் தக்க நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறதே!

இன்னும் மோசமாக, சீனாவும் இரசியாவும் வியத்நாமும் எதிர்நிலை எடுத்து மாபெரு விடுதலை மறவர்களான-
மா செ துங்
வி.ஐ.இலெனின்
ஓ சி மின்
-ஆகியோர்க்கு இழிவு சேர்க்க முயல்கின்றனவே!

என்ன கொள்கை? எங்கே பொதுமை?
எங்கே ஒடுக்குமுறை எதிர்ப்பு?

தன்னலமே கொள்கையாக்கிக் கொண்டார்கள்!